பானை சின்னத்தில் களமிறங்கும் திருமாவளவன் - கொண்டாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி
தொல் திருமாவளவன்
நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளதோடு தேர்தலையும் சந்திக்கிறது. குறிப்பாக, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் திமுகவுடன் கூட்டணி அமைத்து விசிக போட்டியிடுகிறது.
கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்திலும் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறுவதற்காக இரண்டு பேரும் பானை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்து, நாடாளுமன்ற தேர்தலில் பொது சின்னமாக பானை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்திடம் விசிக மனு அளித்தது.
இதற்கு கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் குறைந்தபட்சம் 1 சதவீதத்திற்கு குறையாமல் வாக்குகளை பெற்றிருந்தால் மட்டுமே பொது சின்னம் கோர முடியும். எனவே, பொது சின்னமாக பானை சின்னம் வழங்க முடியாது என்று விசிகவுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியிருந்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தல்களில் 1.51 சதவீதம் மற்றும் 1.18 சதவீத ஓட்டுகள் பெற்றதாகக் கூறி, தங்களுக்கே பானை சின்னம் வழங்க வேண்டும் என விசிக வழக்கு தொடர்ந்தனர். பொது சின்னம் கோரும் விண்ணப்பத்துடன், கட்சியின் நிதியாண்டு கணக்கை தாக்கல் செய்யவில்லை என காரணம் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்தது. அதை உச்ச நீதிமன்றத்திலும் தெரிவித்தது.
இன்று வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விசிகவுக்கு பானை சின்னம் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாக கட்சியினர் கவலையுடன் இருந்தனர். ஆனாலும், விசிக வேட்பாளர்கள் நிச்சயமாக பானை சின்னத்தில் தான் போட்டியிடுவர் என்று பேட்டியளித்த திருமாவளவன், விழுப்புரம் மற்றும் சிதம்பரம் லோக்சபா தொகுதிகளில், நேற்று வரை பானையை காட்டி ஓட்டு கேட்டார்.
இந்த நிலையில் தான், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விசிகவிற்கு பானை சின்னம் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம். பானை சின்னம் ஒதுக்கீடு செய்ததற்கான ஆணையை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இருந்து பெற்றுக் கொண்டார் திருமாவளவன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu