இன்று மாலையுடன் ஓயும் தேர்தல் பிரச்சாரம்! தீர்ப்பெழுத தயாராகும் வாக்காளர்கள்!
மக்களவைத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. தமிழ்நாடு புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த முதல் கட்ட தேர்தலில் நாடு முழுவதும் 21 மாநிலங்களில், 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். 1,625 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர்களில் 135 பேர் மட்டுமே பெண்கள். 79 முஸ்லீம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 890 பேர் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தமிழ்நாட்டின் கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். குறைந்த பட்சமாக அசாமின் திருப்ருகர் மற்றும் நாகாலாந்து தொகுதிகளில் 3 வேட்பாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர்.
அதிக வயதான வேட்பாளராக மத்திய பிரதேசத்தின் சித்தி தொகுதியில் 83 வயதான பகவான் பிரசாத் திவாரி என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். குறைந்த வயது வேட்பாளர்களாக தமிழ்நாட்டில் 25 வயது வேட்பாளர்கள் 6 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவருமே சுயேட்சையாக களம் காண்கின்றனர்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான அணியில் தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
அ.தி.மு.க. தலைமையிலான அணியில் அ.தி.மு.க., தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்புக்குழு, புதிய நீதிக்கட்சி, ஐ.ஜே.கே., தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் களம் காண்கின்றன.
நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் 26 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். தமிழ்நாட்டிலிருந்து 30 முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலை எதிர்கொள்கின்றனர். முதல் கட்ட தேர்தலை எதிர்கொள்ளுவோரில் 450 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள். இவர்களில் தமிழ்நாட்டில் ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் ரூ.662 கோடி சொத்து மதிப்புடன், தமிழ்நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புடைய வேட்பாளராக உள்ளார்.
இவரைத் தவிர சிவகங்கைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் (ரூ.304 கோடி) , வேலூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் (ரூ.152 கோடி) , சிவகங்கைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் (ரூ.96 கோடி ) சொத்து மதிப்புடன் உள்ளனர். 10 வேட்பாளர்கள் தங்களிடம் சொத்து எதுவுமே இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் இன்று பிரசாரம் நிறைவடைவதால் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu