நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அனல் பறக்கும் பிரசாரம் நிறைவடைந்தது

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அனல் பறக்கும் பிரசாரம் நிறைவடைந்தது
X
தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சிகளாக இருக்கும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, 21 மாநகராட்சிகளில் உள்ள 1,374 பதவிகளுக்கும், 138 நகராட்சிகளில் 3,843 பதவிகளுக்கும், 490 பேரூராட்சிகளில் 7,621 பதவிகளுக்கும் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

வேட்புமனு தாக்கல், ஜனவரி மாதம் 28-இல் தொடங்கி, பிப்ரவரி 4-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதை தொடர்ந்து, வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியானதும், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதே நேரம், திமுக கூட்டணி கட்சிகள் தவிர மற்றவை, தனித்து களம் காண்கின்றன.

அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.க., புதியநீதி கட்சி, சமூக சமத்துவ படை உள்ளிட்ட கட்சிகள் இருந்தாலும், பெரிய அளவில் செல்வாக்கு இல்லாதவை. மாறாக ஓட்டு வங்கி உள்ள பாஜக, பாமக உள்ளிட்ட்வை அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்து களம் காண்கின்றன. இதேபோல தே.மு.தி.க., சமத்துவ மக்கள் கட்சி, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றனர்.

மறுபக்கம், அதிமுக, பாஜக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதிமய்யம் உள்ளிட்டவை தனித்தனியே உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கின்றன. கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தவிர, மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டனர். அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சற்றும் சளைக்காமல், சுயேச்சை வேட்பாளர்கள் வித்தியாசமான பிரசாரம் மேற்கொண்டு, தேர்தல் களத்தை விறுவிறுப்பாக்கினர்.

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. பிரசாரம் முடிந்த பின் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

வரும் 19,ஆம் தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், மொத்தம் 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 218 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
why is ai important to the future