தனியார் நிறுவனங்களால் கல்வி வணிகமயமாகி விட்டது: நீதிபதிகள் வேதனை

தனியார் நிறுவனங்களால் கல்வி வணிகமயமாகி விட்டது: நீதிபதிகள் வேதனை
X
மனசாட்சியே இல்லாத தனியார் நிறுவனங்களால் கல்வி முழுமையாக வணிகமயமாகி விட்டதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த சித்தார்த்தன் என்பவர் மருத்துவ மேற்படிப்புக்காக கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் அவருக்கு புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. ஆனால் உரிய நேரத்தில் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை என்றும், கட்டாய பணி உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும் காரணம் கூறி அவருக்கு மாணவர் சேர்க்கை மறுக் கப்பட்டது.

அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சித்தார்த்தன் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு ஒதுக்கீட்டின்கீழ் தனக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிக கட்டணம் செலுத்தும்படி கல்லூரி நிர்வாகம் கட்டாயப்படுத்தியதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப் பட்டது. புதுச்சேரி அரசு தரப்பில், அடுத்த கல்வியாண்டிலேயே அந்த மாணவருக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்து அவர் மருத்துவ மேற்படிப்பையும் முடித்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், மாணவர் சித்தார்த்தன் தனது மருத்துவ மேற்படிப்பை வேறு மருத்துவக் கல்லூரியில் பயின்று முடித்திருந்தாலும், கடந்த 2017-18-ம் கல்வியாண்டில் அவருக்கு சேர்க்கை வழங்க மறுத்தது தவறு என்று கூறிய நீதிபதிகள் , இதற்காக சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகம் ரூ.15 லட்சத்தை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த இழப்பீட்டு தொகையில் புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் ரூ.10 லட்சத்தையும், சென்டாக் எனப்படும் புதுச்சேரி மருத்துவ சேர்க்கைக்குழு ரூ.5 லட்சத்தையும் நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

பின்னர் நீதிபதிகள் மேலும் கூறுகையில், சமூகத்துக்கு சேவை செய்வதாகக் கூறிக்கொண்டு தனியார் கல்வி நிறுவனங்களும், தனிநபர்களும் மனசாட்சியே இல்லாமல் கல்வியை முழுமையாக வணிகமயமாக்கி விட்டனர். ‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ என்று திருக்குறள் சுட்டிக்காட்டிய அந்த இருகண்களும் தற்போது வணிக பொருட்களாகி விட்டன.

அதை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளது மிகவும் வேதனை தருகிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் தடுக்க தேசிய மருத்துவ ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!