அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு

அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு
X

அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டபோது 

லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள அங்கித் திவாரியை, காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல்

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த 2018-ம் ஆண்டு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு வந்து இருப்பதாக கூறி, மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.51 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

அதில் ரூ.20 லட்சத்தை நத்தம் அருகே வாங்கிய அவர், பின்னர் திண்டுக்கல்லுக்கு வந்து ரூ.20 லட்சத்தை வாங்கிய போது திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அரசு டாக்டரிடம் லஞ்சம் வாங்கியதில் வேறு அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்று அங்கித் திவாரியை காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்தனர்.

இதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவருடைய தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் 40 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். அவருக்கு வருகிற 24ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து சிறையில் இருக்கும் அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அனுமதி கேட்டு கடந்த 2ம் தேதி திண்டுக்கல் தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அங்கித் திவாரி லஞ்ச வழக்கில் நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரிடம் விசாரிக்க அனுமதிக்க இயலாது என்று அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவை கடந்த 12ம் தேதி தள்ளுபடி செய்து தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு மோகனா உத்தரவிட்டார்.

இந்த நிலையில் லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை, தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில்அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கோரிக்கை மனுவை திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில்அமலாக்கத்துறை முறையிட்டுள்ளது.

Tags

Next Story