துரைமுருகனின் மாணவிகள் அவமதிப்பு பேச்சு.. டிடிவி தினகரன் கண்டனம்

துரைமுருகனின் மாணவிகள் அவமதிப்பு பேச்சு.. டிடிவி தினகரன் கண்டனம்
X

டிடிவி தினகரன்.

துரைமுருகனின் மாணவிகள் அவமதிப்பு பேச்சுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ வைரலாகியது. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதில் சிறிய பகுதி மட்டுமே வீடியோவில் உள்ளது. 40 வினாடிகள் நீடிக்கும் அந்த வீடியோவில், அமைச்சர் துரைமுருகன் குடும்பப் பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டம் பற்றியும் பேசியுள்ளார்.

மேலும், செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு ரூ.1000 கொடுக்கப் போகிறோம். நீங்களே உங்கள் செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அவர் (கணவர்) சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம். எனவே குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக ரூ.1000 கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில் துரைமுருகனின் இந்த அவமதிப்பு பேச்சுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க மூத்த அமைச்சர்கள் தாய்மார்களையும், மாணவிகளையும் இழிவுபடுத்தும் வகையில் தொடர்ந்து பேசிவருவது கண்டிக்கத்தக்கது.

1000 ரூபாய் உதவி பெறும் மாணவிகள், தாய்மார்களை இழிவுபடுத்தும் வகையில் பொதுநிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியதற்கு பல்வேறு பிரிவினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் செலவு செய்யும் அரசு அவர்களையே இழிவுபடுத்துவது எந்தவகையில் நியாயம்?

இலவசங்கள் தர வேண்டும் என்று பொதுமக்கள் யாரும் இவர்களிடம் கேட்கவில்லை. ஆட்சியைப் பிடிப்பதற்கு தி.மு.க தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைத்தான் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.

பெண்களை இழிவுபடுத்தும் சமூகம் மட்டுமல்ல, பெண்களை அவமதிக்கும் ஆட்சியாளர்களும் நீடித்திருந்ததாக சரித்திரம் இல்லை. பெண்களை அவமதிக்கும் தி.மு.க அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!