சென்னை, மதுரை உயர் நீதிமன்ற பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை
பைல் படம்.
உலகம் முழுவதும் தற்போது நடைபெறும் விழாக்கள், கலைநிகழ்ச்சிகள், திரைப்பட படப்பிடிபுகளில் டிரோன் வகை கேமராக்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. கழுகுப்பார்வை என்ற பெயரில் வித்தியாசமான கோணத்தில் டிரோன் வகை கேமராக்கள் மூலம் காட்சிகளை படம்பிடிக்க முடியும் என்பதால் இளைஞர்களும் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இருப்பினும், டிரோன் வகை கேமராக்கள் மூலம் பல்வேறு சமூகவிரோத செயல்கள் அரங்கேறுவதாகவும், இதனால், விஐபிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனால்தான் பிரதமர், குடியரசுத் தலைவர், முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட மிக முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் இருந்தால் சில நாட்களுக்கு முன்பே அந்தப் பகுதிகளில் டிரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கபட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை பிராட்வே, பாரிமுனை, பூக்கடை பகுதிகளில் பிச்சைக்காரன்-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு, தனியார் நிறுவன விழாவின் படப்பிடிப்பு, திருமண நிகழ்விற்காக படப்பிடிப்பு ஆகியவை கடந்த ஆண்டு அக்டோபர், டிசம்பர் மற்றும் கடந்த மாதம் நடத்தப்பட்டன.
அப்போது, உயர் நீதிமன்ற நுழைவு வாயில்கள் மற்றும் உயர் நீதிமன்ற வளாகம் டிரோன் கேமரா மூலம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தினர் விசாரித்து எச்சரித்து அனுப்பினர்.
டிரோன்கள் மூலம் படம்பிடிப்பது தொடர்ந்து வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை அமைந்துள்ள பகுதிகளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, உயர் நீதிமன்ற நிர்வாக பதிவாளர் ஹரி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu