திராவிட மாடலா? தமிழ் மாடலா? தேதி குறியுங்கள் முதல்வரே- அண்ணாமலை சவால்

திராவிட மாடலா? தமிழ் மாடலா? தேதி குறியுங்கள் முதல்வரே- அண்ணாமலை சவால்
X
திராவிட மாடலா? தமிழ் மாடலா? தேதி குறியுங்கள் முதல்வரே விவாதிக்க தயார் என்று அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மு. க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அரியணையில் உள்ளது. அ.தி.மு.க. வலுவான எதிர்க்கட்சியாக உள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால் தி.மு‌.க. அரசுக்கு அரசியல் ரீதியான எதிர்கட்சியாக தமிழகத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது என்று தான் கூற வேண்டிய நிலை உள்ளது. எந்த ஒரு திட்டம் என்றாலும் சரி, ஒரு செயல்பாடு என்றாலும் சரி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களின் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது என்றாலும் சரி முதல் ஆளாக வந்து நிற்கிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை.

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அவர் தனது இளம் வயது வேகத்திற்கு ஏற்ப துடிப்பான ஒரு அரசியல் தலைவராக செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வை விட பாரதிய ஜனதாவே பிரச்சனைகளை அதிக அளவில் கையில் எடுத்து வருகிறது. இதற்கு காரணம் தமிழகத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 10 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்கிற ஒரு இலக்கே காரணம் ஆகும்.

இந்து சனாதனம் தொடர்பான ஆ. ராசாவின் பேச்சாகட்டும், கவர்னர் மீதான அரசியல் ரீதியான தாக்குதல்களானாலும் சரி, ஐ. என். ஏ. தொடர்பாக எழுந்துள்ள குண்டு வீச்சு சம்பவங்கள் என்றாலும் அனைத்திலும் தி.மு.க.விற்கு சரிக்கு சரி ஈடு கொடுத்து வருகிறார் அண்ணாமலை. தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தனது பணியை கச்சிதமாக செய்து வருகிறார் என்றே கூற வேண்டும்.


அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க சார்பில், கூட்டேரிப்பட்டில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பிரதமர் மோடியின் சாதனை விளக்க கண்காட்சி நடத்தப்பட்டது. இந்தக் கண்காட்சியை நேற்றைய தினம் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டார். அதற்கு முன்பாக, தென் பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களின் வீடுகளுக்கு நேராகச் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் கூட்டேரிப்பட்டு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க அரசு கடந்த 16 மாதங்களில் ஊழல் அரசு எனும் பெயரை வாங்கியுள்ளது. அதில் மாற்று கருத்தே இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பெருமளவில் சீரழிந்திருக்கிறது. மத்திய அரசின் கூடங்குளம், சேலம்- சென்னை எட்டுவழிச்சாலை போன்ற எத்தனையோ திட்டங்கள் இங்கு தடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது தி.மு.க.விற்கு ஆதரவாக புவியியல் ஆர்வலர்கள், என்.ஜி.ஓ என்றெல்லாம் வந்தார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அந்த என்.ஜி.ஓக்கள் எல்லாம் இப்போது எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. எல்லோருமே மௌனமாக இருக்கிறார்கள். பல திட்டங்களை வேண்டாம் என்று தொடர்ந்து குரல் கொடுத்தவர்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள். ஆக இவர்களது நோக்கம் தமிழகத்தின் வளர்ச்சியை தடுப்பது தான். பதவியில் இல்லாத போது எல்லா திட்டத்தையும் எதிர்ப்பார்கள். ஆளும் கட்சியானதும் கண்டும் காணாமல் விட்டு விடுவார்கள். இது தான் அவர்களது நிலைப்பாடு. ஆனால் பாஜக அப்படி அல்ல. தமிழகம் உள்பட ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு ஒரு தேசிய இயக்கம் ஆகும்.

இன்று இந்தியாவில் காப்பரின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. உலகம் முழுவதிலும் 40 சதவீதம்காப்பரை ஏற்றுமதி செய்து கொண்டிருந்த நாடு இந்தியா. இன்று நம்முடைய தேவைக்கு இறக்குமதி செய்து கொண்டுள்ளோம். பா.ஜ.க. எப்போதுமே தமிழ் மாடலா..? திராவிட மாடலா..? என விவாதிக்க தயாராக இருக்கிறது. உண்மையாகவே 'திராவிடன்' என்பதின் அர்த்தம் என்ன என்பதை விவாதிக்க தயாராக இருக்கிறோம். 70 ஆண்டுகளில் தி.மு.க-வின் சாதனை, 'திராவிட மாடல்' என்கிறார்கள், அதையும் விவாதிக்க தயாராக உள்ளோம்.

தேசிய மாடலா... திராவிட மாடலா... இல்லை நாங்கள் முன்வைக்கும் தமிழ் மாடலா..! என விவாதிக்க தயாராக இருக்கிறோம். 16 மாதங்களில் தி.மு.க-வின் ஊழல் பட்டியல், அதையும் விவாதிக்க தயாராக இருக்கிறோம். நாங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பொன்முடி பதில் அளிக்கிறார். அவர் தி.மு.க. கட்சியின் தலைவர் அல்ல. அந்தக் கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சராக இருக்கிறார். அவர் நேரத்தையும், காலத்தையும் குறித்து சொன்னால் பா.ஜ.க சார்பாக மாநில துணைத் தலைவர் அளவில் அவருடன் விவாதிக்க வருவார்கள். தி.மு.க.வின் கட்சித் தலைவர் எப்போது விவாதிக்கத் தயார் என்றாலும், அவர் குறிக்கின்ற இடத்துக்கு நான் வரத்தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!