இ.பி.எஸ்.சுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் 3ம் தேதி விசாரணை
இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி 3ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல் அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறைவினால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. தற்போது அந்த கட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு பிரிவாகவும், ஓ, பன்னீர்செல்வம் தலைமையில் இன்னொரு பிரிவாகவும் செயல்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் மறைந்த ஜெயலலிதாவின் தோழியாக இருந்த வி. கே. சசிகலாவும், தானே உண்மையான அ.தி.மு.க. என கூறி வருகிறார். மேலும் அ.ம.மு.க. என்று தனியாக ஒரு கட்சியை தொடங்கி விட்டாலும் அ.தி.மு.க. மீது இன்றளவும் உரிமை கோரி வருகிறார் டி.டி.வி. தினகரன்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொது குழுவை கூட்டி, தான் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார். இதனை கட்சியிலிருந்து ஏற்கனவே நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஏற்றுக்கொள்ளவில்லை.
இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் இருவருக்கும் இடையே நடந்த வழக்குகள் தற்போது இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களாக தாக்கல் ஆகி வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. போட்டியிட வேண்டும் என்றால் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தை வேட்பாளருக்கு ஒதுக்குவதற்கு தற்போதைய சூழலில் வழியில்லை. காரணம் அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு தான். இடைக்கால பொதுச் செயலாளரால் சின்னத்தை ஒதுக்க முடியாது. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளரான தனக்கு வழங்குவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடும்படி அந்த மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு இதன் மீது ஜனவரி 30ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதன்படி இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த மனு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டனர். எனவே இந்த மனு மீதான இறுதி விசாரணை பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று இரட்டை இலை சின்னம் யாருக்கு வழங்கப்படும்? அல்லது நிறுத்தி வைக்கப்படுமா? என்பது தெரியவரும்.
இதற்கிடையில் இந்த வழக்கில் தன்னை ஒரு மனுதாரராக சேர்த்துக் கொள்ளும் படியும் தனக்கு தெரியாமல் இந்த வழக்கில் எந்த ஒரு தீர்ப்பும் வழங்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வி. கே. சசிகலாவும் இன்று ஒரு தாக்கல் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu