தமிழகத்தின் 22வது மாநகராட்சியாக அந்தஸ்து உயர போகும் நகராட்சி எது தெரியுமா?
புதுக்கோட்டை நகராட்சி அலுவலகம் (கோப்பு படம்).
தமிழகத்தில் தற்போது சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது இந்த 21 மாநகராட்சியிலும் மேயர்கள் நிர்வாகம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தின் 22 வது மாநகராட்சியாக புதுக்கோட்டை நகராட்சி தரம் உயர்த்தப்பட உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய புதுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற ஒரு கேள்வியை எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த தமிழக நகர்ப்புற நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது பற்றி மாண்புமிகு முதல்வர் அவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்யப்படும் என அறிவித்தார்.
மேலும் புதுக்கோட்டை நகரில் பாதாள சாக்கடை திட்டம் குடிநீர் பிரச்சினை தீர்ப்பதற்கான அரசின் திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளித்தார்.
புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அது தமிழகத்தின் 22 வது மாநகராட்சியாக இருக்கப்போகிறது.
புதுக்கோட்டை நகரம் ஒரு சிறிய நகரம் என்றாலும் அதற்கென்று வரலாற்று சிறப்பு உண்டு. தமிழகத்தில் பழம்பெருமை மிக்க நகரங்களில் புதுக்கோட்டை நகராட்சியும் ஒன்று. நூற்றாண்டு காலமாக நகராட்சியாக இருந்து வரும் புதுக்கோட்டை மாநகராட்சியாக அந்தஸ்து உயர்த்தப்படுவதற்கு அத்தனை தகுதிகளும் உள்ளன.
அது மட்டும் இன்றி மன்னர்கள் காலத்தில் தொண்டமான் மன்னர்கள் புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆட்சி செய்தார்கள். அந்த வகையில் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்திய யூனியனுடன் இணைக்கப்பட்ட கடைசி சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றளவும் புதுக்கோட்டை மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை தான் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தொண்டமான் மன்னர்களின் வகையறாக்கள் இன்னமும் புதுக்கோட்டை மாநகர மக்களால் மன்னர் குடும்பம், ராஜா, ராணி என்ற மரியாதையுடன் பழகி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu