கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் எப்படி இருக்கும் என தெரியுமா?

கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் எப்படி இருக்கும் என தெரியுமா?
சென்னையில் திறக்கப்பட்ட கருணாநிதி நினைவிட அருங்காட்சியகம் எப்படி இருக்கும் என்பதை அறிய தொடர்ந்து படிக்கலாம்.

சென்னை மெரினாவில் கலைஞர் கருணாநிதியின் நினைவிடம், அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த கலைஞர் அருங்காட்சியகத்தில் என்னென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கிறது என்றும், எப்போது பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்பது பற்றியும் இங்கே பார்க்கலாம்.

மறைந்த திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ள கலைஞர் நினைவிடத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளது என்று இங்கே விரிவாக பார்க்கலாம்.

மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் வரவேற்பது போன்று அமைந்துள்ளது. சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்புறம் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ளது. கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

கருணாநிதியின் சமாதியில் 'ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறார்' என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கருணாநிதியை பாராட்டி சோனியா காந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை தனது நினைவிடத்தில் வைக்க வேண்டும் என்று கருணாநிதி சுட்டிக்காட்டிய கடிதத்தின் கல்வெட்டும் அதன் அருகே வைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தை சுற்றிலும் கருணாநிதியின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன. கருணாநிதி சமாதியின் பின்புறம் வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இது உதயசூரியன் வடிவமைப்பை கொண்டுள்ளது. பகல் நேரத்தில் வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கும் கருணாநிதியின் இந்த தோற்றம் இரவு நேரத்தில் 'லேசர்' மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகளுடன் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. நினைவிடம் அருகே 20 ஆயிரம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் கவரும் விதமாக உள்ளது.

முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 'கலைஞர் எழிலோவியங்கள்' என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. இங்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருக்கும் தோற்றம் அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.

புகைப்படத்தை எடுத்தவுடன் 'டிஜிட்டல்' தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் அந்த புகைப்படம் சட்டென்று 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு வந்து விடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நினைவிடம் அருகே 15 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஒருவாரத்திற்கு பிறகு பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கபட உள்ளது. அருங்காட்சியகத்தில் பார்வையிட கட்டணம் கிடையாது என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Tags

Next Story