தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு
![தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. வழக்கு](https://www.nativenews.in/h-upload/2024/04/02/1885836-higha.webp)
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்).
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் தெரிவிக்கின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்வதால் தான் பாஜக வெல்கிறது என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி பேசும்போது, ‛‛பாஜக தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்கிறது. அதனால் தான் வெல்கிறது. இல்லாவிட்டால் 180 இடங்களில் தான் வெல்லும்'' என தெரிவித்தார். இதற்கிடையே தான் தற்போது மீண்டும் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான சந்தேகங்கள் வலுக்க தொடங்கி உள்ளன.
இந்நிலையில் தான் திமுக சார்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 1950 முதல் 1990 வரை தேர்தல்களில் வாக்குச்சீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அதன் பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து சமூகத்தின் அனைத்து பிரிவினரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பதிவான வாக்குக்கும், எண்ணப்பட்ட வாக்குக்கும் இடையில் குறைபாடுகள் இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், தேர்தலை நியாயமான முறையில் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக, வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை இணைப்பது தேர்தல் ஆணைய விதிகளுக்கு முரணானது எனவும், வாக்குப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும், வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரங்கள் வைக்க எந்த விதிகளும் வகை செய்யவில்லை எனவும், அவ்வாறு வைப்பது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நிபுணர்கள் கொண்டு சோதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த நடவடிக்கைகளை பொது மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மேற்கொள்வதில்லை. இதனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு ஒப்புதல் வழங்க உரிய விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
அதோடு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் அச்சு இயந்திரத்தை வைக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu