கோவிலுக்குள் பட்டியலின இளைஞர்.. திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்

கோவிலுக்குள் பட்டியலின இளைஞர்..  திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி நீக்கம்
X

சேலம் அருகே கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரைதகாத வார்த்தைகளால் பேசும் திமுக ஒன்றிய செயலாளர்.

சேலம் அருகே கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை திமுக ஒன்றிய செயலாளர் தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது திருமலைகிரி. இந்த ஊராட்சி, வீரபாண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்ற பட்டியலின இளைஞரை ஊர் மத்தியில் நிற்க வைத்து திமுகவின் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதன் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனால் ஏராளமானோர் இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். தொடர்ந்து திமுகவிற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்க ஒன்றிய கழகச் செயலாளர் டி.மாணிக்கம் கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாவட்டத்தின் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவரே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு மக்களின் அதிருப்தியை ஏற்படுத்துவது திமுகவினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து சேலம்-திருமலைகிரியில் உள்ள கோவிலுக்குள் நுழைந்ததற்காக பிரவீன் குமார் எனும் இளைஞரை இழிவுபடுத்தி மிரட்டிய திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் மீது காவல்நிலையத்தில் SC/ST பிரிவில் புகார் கொடுக்கப்பட்டது.

புகாரின்பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஜாதிவெறியோடு பேசிய முன்னாள் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!