திமுக இனியும் மக்களுக்கு துரோகம் செய்யக் கூடாது: அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. (கோப்பு படம்).
சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் எம்ஆர்பி (MRB) செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். போராட்டத்திற்கு அதிகாலையில் வந்தவர்களை காவல் துறையினர் அனுமதிக்காததால் கோஷங்களை எழுப்பி சாலை மறியல் செய்வதாக தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட எம்ஆர்பி செவிலியர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, ஒவ்வொரு துறையிலும் வாக்களித்த மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. திமுக வாக்குறுதி எண் 356ல், ஒப்பந்த நியமன முறையில் பணியாற்றும் மருத்துவர்களும் செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று கூறி, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் துரோகம் செய்திருக்கிறது.
நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை, காவல்துறையை ஏவி, சமூக விரோதிகளைப் போல அடாவடியாகக் கைது செய்திருக்கிறது திமுக அரசு.
ஏற்கனவே, வாக்குறுதி எண் 181ல், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஏமாற்றி, அவர்களையும் கைது செய்திருந்தது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியதைத் தவிர, இவர்கள் செய்த தவறென்ன?
உடனடியாக, கைது செய்தவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், திமுக கொடுத்த வாக்குறுதிகளை நம்பி ஏமாந்த மக்களுக்கு இனியும் துரோகம் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu