திமுக கூட்டணி கட்சி எம்.பி. கொரியர் அலுவலகத்தில் அமலாக்க துறை சோதனை

நவாஸ்கனி எம்பி.
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்.டி கூரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் மீண்டும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராகவும் நவாஸ் கனி அறிவிக்கபட்டுள்ள நிலையில் பல்லாவரம் எஸ். டி. கூரியர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. தமிழக அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்கள் கைப்பற்றியது. செந்தில் பாலாஜியில் சிறையில் அடைபட்டுள்ளார்.
தொடர்ந்து கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அலுவலகங்கள், மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. கடந்த 9ந்தேதி அரசு ஒப்பந்ததாரர், பார் உரிமையாளர், கட்டுமான நிறுவன அதிபர் வீடு என சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
அப்போது, சென்னை வேப்பேரியில் போலீஸ் நிலையம் அருகே உள்ள பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவரும், கட்டுமான தொழில் மற்றும் நிதி நிறுவன தொழிலில் ஈடுபட்டு வரும் தொழில் அதிபர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இன்று மீண்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ். இவர் தேசிய நெடுஞ்சாலையில் பெயிண்ட் அடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிறுவனத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பரிமாற்ற புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே பல்லாவரம் எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகத்தில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரத்தில் உள்ள அலுவலகத்திலும் சோதனையை அமலாக்கத்துறை தொடங்கியுள்ளது. எஸ் டி கொரியர் நிறுவனத்தை நவாஸ் கனியின் மூத்த சகோதரர் அன்சாரி தான் தலைமை இயக்குனராக உள்ளார். நவாஸ் கனியும் நிர்வாக இயக்குனராக உள்ளார். அவருடைய மற்றொரு சகோதரர் சிராஜுதீன் இணை இயக்குனராக உள்ளனர். கொரியர் நிறுவனத்தின் மூலம் பொருட்கள் எதுவும் சட்டவிரோதமாக கடத்தப்பட்டதா என்ற கோணத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் வேட்பாளராக மீண்டும் நவாஸ் கனி போட்டியிடுகிறார். இந்த சூழ்நிலையில் அவரது நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த சோதனை திமுக கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அதேபோல் பல்லாவரத்தில் ஹோட்டல் உரிமையாளர் ரியாஸ் என்பவரது அலுவலகத்திலும் காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu