அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. (கோப்பு படம்).
அரசு பாரில் மது அருந்திய இருவர் உயிரிழப்பிற்காக அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி உள்ளார்.
தஞ்சாவூரில் மது அருந்திய இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:
தமிழகத்தில் டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, மது அருந்தும் கூடங்களான அனைத்து பார்களிலும் எல்லா நேரங்களிலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. இந்த மதுக் கூடங்களுக்கு கள்ளச் சந்தை மூலமாகவே மதுபானங்கள் வந்து சேர்கின்றன. இதனால் மூன்றாம் தர, நான்காம் தர மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆயத்தீர்வை கட்டாமலே இதுபோன்று மதுக் கூடங்களுக்கு கள்ளச் சந்தையில் மதுபானங்கள் கிடைப்பதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி இழப்பீடு ஏற்படுகிறது. இப்படி தான் தமிழகத்தில் ரூபாய் ஒரு லட்சம் கோடி டாஸ்மாக் ஊழல் நடைபெறுகிறது.
எனவே, இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது வழக்கு தொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மே 10 ஆம் தேதி தமிழக ஆளுநரிடம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
எங்களது குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய வகையில் மரக்காணம் மற்றும் மதுராந்தகம் பகுதியில் விஷ மது அருந்திய 23 பேர் உயிரிழந்தார்கள்; ஒரே வாரத்தில் மீண்டும் தஞ்சையில் இன்னொரு மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை டாஸ்மாக் கடை மது விற்பனை அனுமதிக்கப்படுகிறது .எனினும், தஞ்சை புதிய மீன் மார்க்கெட் அருகே உள்ள பார் ஒன்றில் காலை 10.30 மணியளவில் மது அருந்திய 65 வயது குப்புசாமி என்பவரும், 25 வயது நிரம்பிய விவேக் என்பவரும் உயிரிழந்து உள்ளனர்.
மது அருந்துவதற்கும், திண்பண்டங்கள் விற்பதற்காகவும் அனுமதிக்கப்பட்ட பாரில் மது விற்கப்பட்டது எப்படி?. பகல் 12 மணிக்கு தானே டாஸ்மாக் கடை திறந்திட வேண்டும்? ஆனால், விடிய விடிய அந்த பார் திறந்து இருந்தது எப்படி?. அரசுக்கு எந்தவிதமான குத்தகை கட்டணமும் செலுத்தாமல் அந்த பார் இயங்க அனுமதித்தது யார்?.
இந்த பாருக்கு வந்த மதுபானங்கள் யாரால், எங்கு உற்பத்தி செய்யப்பட்டவை?. அப்பாவி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர். விஷ சாராய மரணம், மதுக்கூடத்தில் மது அருந்திய இருவர் மரணம் ஆகிய சம்பவத்தால் உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu