பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்: வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை
காட்டுபன்றி - கோப்புப்படம்
கொடைரோட்டை அடுத்த ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி, அழகம்பட்டி பகுதியில் வானதி என்ற பெண் விவசாயி சுமார் 10 ஏக்கருக்கும் மேல் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்துள்ளார் இதே போல, அந்தப் பகுதியில் பல்வேறு விவசாயிகளும் மக்காச்சோளம் பயிரிட்டனா்.
இவை நன்கு வளா்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் அருகே உள்ள ரிஷிகரடு வனப்பகுதியில் இருந்து வரும் காட்டுப்பன்றிகள் இரவு நேரத்தில் மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்துவதுடன், சோள தட்டைகளை ஒடித்து சாய்த்து விட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
இதனால், கவலையடைந்த விவசாயிகள் அந்தக் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள மக்காச்சோளப் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு இந்த ஆண்டு இந்தப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக வழக்கத்தை விட அதிக பரப்பில் மக்காச்சோளம், பூசணி, வெங்காயம், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் சாகுபடி செய்துள்ளோம்.
சுமார் 6 மாதகாலப் பயிரான மக்காச்சோளத்தை கடந்த 5 மாதங்களாக கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தோம். இந்த நிலையில், பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள நேரத்தில் காட்டுப்பன்றிகள் தினமும் இரவு நேரத்தில் கூட்டமாக வந்து மக்காச்சோளப் பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே இவற்றைக் கட்டுப்படுத்த வனத்துறையினரும், வேளாண் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu