தேசிய உணர்வின் தாயகமாக தமிழ்நாடு இருந்து வருகிறது.. திண்டுக்கல் விழாவில் பிரதமர் மோடி உரை..
பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி.
திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற 36 ஆவது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, 2300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களையும், மாணவர்கள் சிலருக்கு தங்கப் பதக்கங்களும் வழங்கினார்.
தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
மகாத்மா காந்தியால் திறந்து வைக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் மகாதாமாவின் லட்சியங்கள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டிற்கான யோசனைகளின் உணர்வை காண முடிகிறது. காந்திய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் மாணவர்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.
மகாத்மா காந்தியின் இதயத்திற்கு நெருக்கமான கருத்துக்களுடன் பணியாற்றுவதே அவருக்குச் செய்யும் சிறந்த அஞ்சலி. கடந்த 8 ஆண்டுகளில், காதி துறையின் விற்பனை 300 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் கடந்த ஆண்டு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
கிராமப்புற வளர்ச்சி குறித்த மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். துப்புரவு என்பது மகாத்மா காந்திக்கு மிகவும் விருப்பமான கருத்தாக இருந்துள்ளது. மத்திய அரசு அடிப்படை வசதிகளை வழங்குவதோடு நின்றுவிடாமல், நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்களுடன் கிராமங்களை இணைக்கிறது. கிட்டத்தட்ட 2 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் வகையில் 6 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆப்டிக் பைபர் கேபிள் போடப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களின் எதிர்காலத்திற்கு நிலையான விவசாயம் மிகவும் முக்கியமானது. மத்திய அரசின் இயற்கை விவசாயத் திட்டம் வடகிழக்கு மாநிலங்களில் அதிசயங்களைச் செய்து வருகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் தொடர்பான கொள்கையை அரசு வெளியிட்டது. விவசாயத்தை ஒற்றைக் கலாச்சாரத்தில் இருந்து காப்பாற்றி, தானியங்கள், தினைகள் மற்றும் பிற பயிர்களுக்கு புத்துயிர் அளிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
மகாத்மா காந்தி ஒன்றுபட்ட சுதந்திர இந்தியாவுக்காகப் போராடினார். கிராமமே இந்தியாவின் ஒருமைப்பாட்டின் கதை என மகாத்மாக காந்தி. தமிழ்நாடு எப்போதுமே தேசிய உணர்வின் தாயகமாக இருந்து வருகிறது. காசியில் விரைவில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். காசிக்கும் தமிழகத்துக்கும் இடையே உள்ள பந்தத்தை கொண்டாடுவோம்.
பட்டம் பெறும் இளம் பெண்களை மிகப் பெரிய மாற்றம் செய்பவர்களாக நான் பார்க்கிறேன். கிராமப்புற பெண்கள் வெற்றி பெற உதவுவீர்கள். அவர்களின் வெற்றி தேசத்தின் வெற்றி. கொரோனா பரவல் காலத்தில் இந்த நூற்றாண்டில் மிக மோசமான நெருக்கடியை உலகம் எதிர்கொண்ட நேரத்தில், தடுப்பூசியை கண்டுபிடித்து இந்தியா ஒரு பிரகாசமான நாடாக அமைந்தது.
இந்தியா பெரிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று உலகம் எதிர்பார்க்கிறது. ஏனெனில், அந்த எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யக் கூடிய இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் உள்ளது. "சவால்களை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், அவற்றை அனுபவிப்பவர்களும், கேள்வி கேட்பதோடு மட்டுமல்லாமல், பதில்களைக் கண்டுபிடிப்பவர்களும், அச்சமற்றவர்கள் மட்டுமல்ல, அயராதவர்களும், ஆசைப்படுவது மட்டுமல்லாமல் சாதிக்கவும் செய்வது இளைஞர்கள் தான்.
பட்டம் பெறும் இளைஞர்களான நீங்கள் தான் புதிய இந்தியாவை உருவாக்குபவர்கள். அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது என பிரதமர் மோடி பேசினார்.
இளையராஜாவுக்கு டாக்டர் பட்டம்:
பட்டமளிப்பு விழாவின்போது, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட சிலருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை பிரதமர் மோடி வழங்கினார், நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், காந்திர கிராம் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, திண்டுக்கல் பகுதியில் சாலையோரம் திரண்டு நின்று வரவேற்ற பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கையசைத்து சென்றார்.
நிகழ்ச்சி முடிந்ததும் பிரதமர் திண்டுக்கல்லில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை செல்வதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக அவர் காரிலேயே மதுரை விமான நிலையம் சென்றடைந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu