திண்டுக்கல் அருகே ராவணனுக்குச் சிறப்புப் பூஜை நடத்திய சிவனடியார்கள்
சிறுமலை அடிவாரத்தில் ராவணனுக்கு பூஜை செய்த சிவனடியார்கள்
வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமரின் மனைவி சீதையை ராவணன் கடத்தி செல்வதாகவும், ராவணனை ராமர் கொன்றுவிடுவதாகவும் சொல்லப்படுகிறது. ராமாயண இதிகாசத்தில் தீவிர சிவ பக்தராக அடையாளப்படுத்தப்பட்ட ராவணன். அரக்கராக அறியப்படும் ராவணன் இலங்கை அரசனாகக் கூறப்பட்டாலும், அவரை பெரும்பான்மை மக்கள் விரும்பி வணங்குவதில்லை.
இந்நிலையில், ஜனவரி 22 அன்று ராமர் பிறந்த இடம் என்று கூறப்படும் அயோத்தியில் ராமர் சிலை நிறுவப்பட்டு பிரம்மாண்டமான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து, இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே ராவணனுக்குத் தமிழில் சிறப்பு யாக வேள்வி பூஜை நடத்தி சிவனடியார்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கொடைரோடு அருகே அமைந்துள்ள பள்ளப்பட்டி சிறுமலையின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது 'ஓம் திருமேனி சங்கம ஆசிரமம்'. இங்குள்ள தமிழ் ஆலயத்தில் ராமர் மற்றும் சீதாதேவிக்குத் தமிழில் யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, ஜனவரி 23 காலை குடவாசல் சுவாமிகள் தலைமையில் தமிழ் ஆலயத்தில் அமைந்துள்ள குன்று பகுதியில், தமிழ் மன்னர்களில் ஒருவரான இலங்கேஸ்வரன் என்று அழைக்கப்பட்ட ராவணனுக்குச் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடத்தப்பட்டன.
ராவணன் உருவப் படத்திற்கு முன்பு புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு, தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் கனிகள் படைக்கப்பட்டு, தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டு யாக வேள்வி பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டது.
ராவணனின் சிவ பக்தியைப் போற்றும் விதமாக, பதினோராவது சித்தர் கருவூரார் சுவாமிகளின் குரு வழிபாட்டுச் சீடர்களான சிவ நெறிச் செல்வர்கள் தமிழில் வேத மந்திரங்களை முழங்கினர். இதனைத் தொடர்ந்து சித்த ராமாயணம், இராவண காதை, மண்டோதரி வாக்கு, ராவணன் நீதி, சீதை நீதி என பெயரிடப்பட்ட 60 நூல்கள் குறித்து விளக்கச் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது
இந்த ராவண யாக வேள்வி பூஜையில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சிவ பக்தர்கள் பங்கு பெற்று சாமி தரிசனம் செய்தனர்.அயோத்தியில் ராமருக்குச் சிலை பிரதிஷ்டை நடைபெற்ற நேரத்தில் தமிழ்நாட்டில் ராவணனுக்குப் பூஜைகள் நடைபெற்று இருப்பது ஆன்மீக பக்தர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu