பழனி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு

பழனி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு
X
பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பழனி கிரி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஆகும். பழனி முருகன் கோவிலில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இன்றளவும் தமிழகத்தில் அதிக வருவாய் உள்ள கோயில்களில் முதலிடம் பெறுவது பழனி தண்டாயுதபாணி கோயில் தான்.

பழனி மலைக்கோயில் வீதிகளில் பஞ்சாமிர்த கடைகள், ஓட்டல்கள், அலங்கார பொருள் விற்பனை கடைகள் பல உள்ளன. பழனிக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். குறிப்பாக சபரிமலை சீசன் காலத்தில் கிரிவீதிகளில் கூட்டம் அலைமோதி காணப்படும். வியாபாரமும் களைகட்டும்.

அதேபோல் பழனி வடக்கு கிரிவீதியில் உள்ள கோவில் முடிமண்டபம், நூலகம், பொருட்கள் வைப்பறை, தகவல் மையம் ஆகியவை உள்ளன. இங்கும் பக்தர்கள் வந்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் சார்ந்த அலுவலகங்கள் முன்பு பக்தர்களுக்கு இடையூறாக பல்வேறு கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது. இதனால் பக்தர்கள் அவதி அடைந்து வந்தனர். அதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் அவ்வப்போது கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவில் சார்ந்த அலுவலகம் முன்பு ஆக்கிரமிப்பை தடுக்க அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டன. இதனால் அங்கு பக்தர்கள் எளிதில் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவில் அலுவலகம் முன்பு தடுப்பு கள் வைக்கப்பட்டதற்கு அங்குள்ள சாலையோர வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது கிரிவீதிகளில் தடுப்புகள் வைப்பதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறினர்.

இதற்கிடையே நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் கவுன்சிலர்கள் அங்கு வந்து கிரிவீதியில் வைக்கப்பட்டு உள்ள தடுப்புகளை பார்வை யிட்டனர். அப்போது சாலையோர வியாபாரிகள் அங்கு வந்து வியாபாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!