பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாண வைபவம்
முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை சமேதராக மணக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வெள்ளிமயில் வாகனத்தில் கோவிலுக்குள்ளேயே சுவாமி உலா நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக 18ம்தேதி வரை வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்ததால், இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா பக்தர்கள் இன்றி நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவின் ஆறாம் நாளான இன்று, முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி-வள்ளி, தெய்வயானை திருக்கல்யாண நிகழ்ச்சி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது.
திருக்கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.அருள்மிகு முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை சமேதராக மணக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து நான்குரத வீதிகளில் வழக்கமாக நடைபெறும் வெள்ளித்தேரோட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டு, கோவில் வளாகத்திற்குள்ளேயே வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது.
இதேபோல நாளை மாலை வழக்கமாக நடைபெறும் தைப்பூசத் தேரோட்டமும் ரத்து செய்யப்பட்டு சிறிய மரத்தேரில் கோவில் வளாகத்திற்குள்ளேயே வலம் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதன்முதலாக பக்தர்கள் இன்றி நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை பக்தர்கள் காணும்படி திருகோவில் நிர்வாகம் சார்பில் இணையதளம் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu