போலி பத்திரப்பதிவு செய்து நிலத்தை அபகரிக்க முயன்ற போலி நீதிபதி உள்பட 3 பேர் கைது
கொடைக்கானலில் போலி பத்திரப்பதிவு செய்து, அடுத்தவர் நிலத்தை அபகரிக்க முயன்ற போலி நீதிபதி உள்பட 3 பேர் கைது
கொடைக்கானலில் போலி பத்திரப்பதிவு செய்து, அடுத்தவர் நிலத்தை அபகரிக்க முயன்ற போலி நீதிபதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு கடந்த 13-ந்தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். அவர் தனது பெயரை ராமசாமி என்றும், கொடைக்கானல் டோபிகானல் பகுதியில் குடியிருப்பதாகவும் தெரிவித்தார். அவருடன் மதுரை தெற்குமாசி வீதியை சேர்ந்த ராம்குமார், சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரமேஷ், கொடைக்கானல் டோபிகானல் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி ஆகியோரும் வந்தனர். அப்போது ராமசாமி என்று அறிமுகமான நபர், சென்னை கொளத்தூர் அருகே திருமால்புரம் காலனி பகுதியில் தனக்கு சொந்தமான 5½ சென்ட் நிலம் இருப்பதாகவும், அதனை ராம்குமாருக்கு பவர் பத்திரமாக பதிவு செய்ய வேண்டும் என்று கூறி விண்ணப்பம் செய்தார்.
அப்போது அந்த பத்திரத்தை பெற்றுக்கொண்ட சார்-பதிவாளர் ராஜேஷ்பிரபு, சம்பந்தப்பட்ட நிலம் சென்னையில் உள்ளதால், அங்குள்ள சார்-பதிவாளரிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்றார். மேலும் தடையில்லா சான்றிதழ் வந்தபின்னரே பத்திரப்பதிவு செய்ய முடியும் என்றும், அதற்கான நடைமுறை சில நாட்களில் முடிவடையும் என்றும் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே பத்திரப்பதிவு செய்ய வந்தவர்களின் நடவடிக்கையில் சார்-பதிவாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதுகுறித்து அவர் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தார்.அதன்பேரில், போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், சென்னை கொளத்தூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்.
அப்போது கொடைக்கானல் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை பதிவு செய்ய வந்த ராமசாமி, உண்மையான ராமசாமி இல்லை என்பது தெரியவந்தது.இதையடுத்து அந்த நிலத்திற்கான உண்மையான உரிமையாளரான சென்னை கொளத்தூரை சேர்ந்த ராமசாமியிடம் (வயது 67) போலீசார் விசாரித்தபோது, அவர் தனது நிலத்தை யாருக்கும் பவர் பத்திரம் கொடுக்க முயற்சிக்கவில்லை என்றும், தனது பெயரில் போலியான நபர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலி பத்திரப்பதிவு செய்ய முயன்ற கும்பலை, அவர்கள் வழியிலேயே 'பொறி' வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர்.அதன்படி, பத்திரம் தயாராக உள்ளதாகவும், தாங்கள் வந்து வாங்கிக்கொள்ளலாம் என்றும் ராம்குமாருக்கு சார்-பதிவாளர் அலுவலகம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ராம்குமார், ரமேஷ், ராஜலட்சுமி ஆகிய 3 பேர் மட்டும் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது ராமசாமியை எங்கே என்று சார்-பதிவாளர் ராஜேஷ்பிரபு கேட்டார்.அதற்கு அவருக்கு விபத்தில் கால்முறிவு ஏற்பட்டதாகவும், அதனால் அவரால் வரமுடியவில்லை என்றனர். எனவே தங்களிடம் பத்திரத்தை வழங்கும்படி கூறினர்.
அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், போலி பத்திரம் பதிவு செய்ய முயன்றதாக ராம்குமார் உள்பட 3 பேரையும் கையும்களவுமாக பிடித்தனர். இதில் ராஜலட்சுமி, தான் நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி என்றும், பத்திரத்தை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்றும் வாக்குவாதம் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, அவர் போலி நீதிபதி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் ராஜலட்சுமி உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் இதுபோன்று வேறு எங்கும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால் ராமசாமி என்று நடித்தவர் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu