லேப்டாப் தாருங்கள்.. தெலுங்கானா ஆளுநர் தமிழிசையின் அதிரடி வேண்டுகோள்...
தமிழிசை சௌந்தரராஜன். (கோப்பு படம்).
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அரிமா சங்கத்தின் மதுரை மண்டல மாநாடு நடைபெற்றது. இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பல்வேறு உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, அந்த மாநாட்டில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:
இந்த நிகழ்ச்சியில் பேசிய பலர் என் தந்தை பற்றி பேசி மகிழ்ந்தனர். சிலர் என்னுடன் பேசும்போது மருத்துவருக்கு படித்திருந்தாலும், தமிழ் நன்றாக பேசுவதற்கு என்ன காரணம் என்று கேட்கின்றனர். தமிழிசை என்று பெயர் பெற்றதால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றதால் இப்படி தமிழ் பேசுகிறேன் என பதில் அளித்தேன்.
6 ஆயிரம் குழந்தைகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கால் இடரி கீழே விழுந்தேன். கீழே விழுவது என்பது இயல்பான ஒன்று. ஆனால் அதை பெரிய செய்தியாக வெளியிட்டதால் என்னிடம் பலரும் நலம் விசாரிக்கிறார்கள்.
நான் விழுந்து விழுந்து வேலை செய்தால் தொலைக்காட்சியில் வராது. ஆனால் நான் விழுந்தால் அது பெரிய செய்தியாக தொலைக்காட்சிகளில் வருகிறது. தெலுங்கானாவில் நன்கு படிக்கும் ஏழை மாணவன் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தனக்கு லேப்டாப் இல்லாததால் தனது படிப்புக்கு தடை ஏற்பட்டுள்ளது என்று தனது நிலையை தெரிவித்தார்.
அதனால், அவருக்கு ஒரு லேப்டாப் வாங்கி கொடுத்தேன். சிலநாட்கள் கழித்து என்னை தொடர்பு கொண்ட அந்த ஏழை மாணவர், நான் கொடுத்த லேப்டாப் மூலம் நன்கு படித்து, நல்ல மதிப்பெண் பெற்றுள்ளதாக தெரிவித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, யாராக இருந்தாலும் தங்களது வீட்டில் பயன்படக்கூடிய, அதேநேரத்தில் பயன்படுத்தாத லேப்டாப்கள் இருந்தால் அவற்றை தெலுங்கானாவில் கொண்டுவந்து தன்னிடம் கொடுங்கள். ஆளுநராக இருப்பதால் இதுபோன்ற நன்மைகளை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
ஆனால் இதுபோன்ற நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் நாட்டிற்கு ஆளுநரும், ஆட்டிற்கு தாடியும் எதற்கு? என பேச ஆரம்பித்து விடுவார்கள். ஆனாலும் அவற்றை காதில் கேட்காமல், இதுபோன்ற சேவையை செய்ய ஆரம்பித்தால் மனதிற்கு கிடைக்கும் நிம்மதி அதிகமானது. தொண்டு செய்யும் உள்ளம் என்றுமே தோற்றதில்லை என்பதால் அனைவரும் தொண்டு செய்ய வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu