பழனி அரசு மருத்துவமனையில் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள்
பழனி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு டோக்கன் வழங்குவதற்கு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசுமருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வரும் நோயாளிகள் அதிகளவில் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். பழனி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு காலை 6 மணிமுதல் 11 மணி வரை மருத்துவம் பார்க்கப்படுகிறது. 11 மணிக்கு மேல் வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவம் பார்ககப்படும்.
சிகிச்சைக்காக வரும் புறநோயாளிகள் தங்களது பெயரை பதிவு செய்து டோக்கன் பெற்றால் மட்டுமே மருத்துவரிடம் சிகிச்சை பெறமுடியும். இதனால் அதிகாலை முதலே பழனி அரசு மருத்துவமனையில் டோக்கன் வழங்கும் இடத்தில் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில் பழனி அரசுமருத்துவ மனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் காமராஜ் என்ற ஊழியர் நோயாளிகளிடம் முன்பதிவு டோக்கன் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம் இல்லாமல் இலவசமாக மருத்துவம் பார்க்கும் எண்ணத்தில் வரும் ஏழை நோயாளிகளிடம் வற்புறுத்தி லஞ்சம் வாங்குவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதேபோல் ஊழியர் காமராஜ் பிரசவமான தாய்மார்களை பிரசவ அறையில் இருந்து சாதாரண வார்டுகளுக்கு இடமாற்றம் செய்வதற்கும் 500 முதல் 1000 ரூபாய் வரை லஞ்சம் கேட்டு வாங்குவதாகவும் புகார் எழுந்துள்ளது. பழனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர் காமராஜ் வெளிப்படையாக அனைவரின் முன்பாகவும் அதிகாரத் தோரணையுடன் லஞ்சம் கேட்டு வாங்குவதை பார்த்தால் அரசு மருத்துமமனையில் பணிபுரியும் செவிலியர் முதல் மருத்துவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்தேதான் இந்த செயலில் ஈடுபடுவது போல உள்ளது.
இதே போல பலரும் அதிகளவில் இதுபோன்ற லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu