கொடைக்கானலில் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்கள் அவதி

டோபிகானால் பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென்று வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 தினங்களாக கன மழை பெய்து வருகிறது.
இதனை தொடர்ந்து கொடைக்கானல் மலை பகுதிகளில் காலை முதலே மேகமூட்டம் நிலவி வந்த நிலையில் பிற்பகல் வேளையில் அண்ணாசாலை, பேருந்து நிலையம், மூஞ்சிக்கல், செண்பகனூர், ஏரிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது.
மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக டோபிகானால் பகுதியில் உள்ள ஆற்றில் திடீரென்று வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றங்கரையோர குடியிருப்பு பகுதிக்குள் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சிறிது நேரம் அவதியடைந்தனர்.
மேலும் அப்பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை மழைநீர் சூழ்ந்தது. மேலும் கொடைக்கானல் நகர் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி தனது முழு கொள்ளளவை எட்டியதால் ஏரியின் மதகு திறக்கப்பட்டு வினாடிக்கு 6000லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் ஆற்றங்கரையோர பகுதிகளான டோபிகானால், பெர்ன்ஹில் ரோடு, குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி நகராட்சி அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தும் செல்பி மற்றும் புகைப்படம், எடுத்து செல்கின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu