பழனியில் வேல் சிலையை உடைத்த நபருக்கு பொதுமக்கள் தர்ம அடி

பழனியில் வேல் சிலையை உடைத்த நபருக்கு  பொதுமக்கள் தர்ம அடி
X

பழனி ரவுண்டானா பகுதியில் உடைந்து கிடக்கும் வேல் சிலை

பழனி குளத்து ரவுண்டானாவில் உள்ள வேல் சிலையை உடைத்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்

பழனி பேருந்துநிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் பளிங்கு கற்களால் ஆன வேல் சிலை வைக்கப்பட்டுஉள்ளது. இதற்கு தினமும் பக்தர்கள் மாலை அணிவிப்பர். மேலும் பழனியின் அடையாளமாகவும் இது விளங்குகிறது.

இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் திடீரென வேல் ரவுண்டானா மீது ஏறி அதில் உள்ள வேல் சிலையை தாக்கி உடைத்தார். இதனால் அது கீழே சாய்ந்து இரண்டாக உடைந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.இதில் அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் உடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பழனி நகர போலீசார் விரைந்து வந்து சிலையை உடைத்த நபரை மீட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே வேல் சிலை உடைக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதையடுத்து இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் சிலையை உடைத்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக சிலையை நிறுவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து டி.எஸ்.பி சத்தியராஜ் பேச்சுவார்த்தை நடத்தி 24மணி நேரத்தில் மீண்டும் வேல் சிலையை வைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனை தொடர்ந்து போலீசார், சிலையை உடைத்த நபர் மனநலம் பாதித்தவரா, அல்லது போதை நபரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story