இரண்டாம் போக நெற்பயிர் சாகுபடி துவக்கம் -விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தொடர் மழையின் எதிரொலியாக பல ஆண்டுகளுக்கு பிறகு பழநி பகுதியில் இரண்டாம் போக நெற்பயிர் சாகுபடி துவங்கி உள்ளது. பழநி பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை. இப்பகுதியில் பாலாறு, பொருந்தலாறு, வரதமாநதி மற்றும் குதிரையாறு அணைகளில் இருந்தும், அணைகளில் இருந்து நீர்ப்பாசனம் பெறும் கண்மாய்களின் மூலமும் விவசாயம் நடந்து வருகின்றன.
போதிய மழை இல்லாததால் பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் பல ஆண்டுகளாக 1 போகம் மட்டுமே நெற்பயிர் விவசாயம் நடந்து வந்தது. ஏனைய காலங்களில் குறுகிய கால காய்கறிகள் அதிகளவு பயிரிடப்பட்டு வந்தன. இந்நிலையில் இந்தாண்டு இப்பகுதிகளில் போதிய மழை பெய்துள்ளது.அணைகள் மற்றும் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு பிறகு பழநி பகுதியில் 2ம் போக நெற்பயிர் விவசாயம் துவங்கி உள்ளது. பழநி அருகே பாலசமுத்திரத்தில் குளம் மற்றும் அணை பாசனங்களைக் கொண்டு தற்போது விவசாய நிலங்களில் உழவுப்பணிகள் நடந்து வருகின்றன. வழக்கமாக சித்திரை மாதம் துவங்க வேண்டிய 2ம் போக சாகுபடி மழையின் தாமதத்தின் காரணமாக வைகாசி மாதம் துவங்கி உள்ளது. எனினும், இரண்டாம் போக நெற்பயிர் சாகுபடி துவங்கி இருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu