கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பழனி தைப்பூசத் திருவிழாவுக்கு பக்தர்கள் அனுமதி
தண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவில்கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களை அனுமதிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா வருகிற ஜனவரி மாதம் 12ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜனவரி 18ம்தேதி தைப்பூசத்திருவிழாவும் நடைபெறஉள்ளது. இதனையடுத்து தைப்புசத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், எஸ்.பி.சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இதில் பழனி தைப்பூசத் திருவிழா கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அனுமதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தனர்.
மேலும், பழனி சின்னகுமரர் விடுதியில் பக்தர்களுக்காக கட்டணமில்லா நவீன வசதிகளுடன் 48 குளியலறை, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காத வகையில் 8 டிக்கெட் கவுன்டர்கள் கிழக்கு வெளிப் பிரகாரத்தில் அமைக்கப்பட உள்ளது எனவும், மலைக் கோயிலில் வடக்குப் பிரகாரத்தில் சிறப்பு தரிசனம் மற்றும் கூடுதல் வரிசைகள் அமைப்பது, புனித நீராடும் இடும்பன்குளம் மற்றும் சண்முக நதியில் பக்தர்கள் பாதுகாப்பிற்காக தீயணைப்பு வீரர்களை பணியில் ஈடுபடுத்துவது ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu