கிறிஸ்துமஸ் பண்டிகை: பிஸ்கட்டுகளால் உருவாக்கப்பட்ட வானிலை ஆராய்ச்சி மையம்
கொடைக்கானல் உணவு விடுதியில் பிஸ்கெட்டுகளால் வடிவமைக்கப்பட்ட கொடைக்கானல் வானிலை ஆய்வு மையம்(மாதிரி)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிஸ்கட்டுகளால் வானிலை ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை வரவேற்கும் விதமாக பல்வேறு விடுதிகளில் விதவிதமான கேக்குகளை தயாரித்து சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து படைக்க ஆயத்தமாகி வருகின்றனர்.
இதில் தனிச் சிறப்பாக, ஐரோப்பிய நாட்டு மக்களால் மிகவும் விரும்பி சுவைக்கப்படும் ஜிஞ்சர் பிஸ்கட்டுகளை கொண்டு 200 ஆண்டு பழமையான கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய நுழைவு வாயில் பகுதியை கண்முன் கொண்டு வரும் வகையில் அட்டுவம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் 10 அடி உயரத்தில் நிறுவி உள்ளனர். இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.
பிரமாண்டமாக 200 ஆண்டுகளை கடந்து நிற்கும் கட்டிடக்கலையின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் ஜிஞ்சர் பிஸ்கட்டால் வடிவமைக்கப்பட்ட கொடைக்கானல் வானிலை ஆராய்ச்சி மைய நுழைவு வாயில் பகுதியை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு அதன் முன்பு செல்பி எடுத்து செல்கின்றனர்.
இதுகுறித்து விடுதி மேலாளர் பவன் கூறும்போது, சுற்றுலா பயணிகளைக் கவரும் விதத்தில் இதனை தயாரித்துள்ளோம். தயாரிக்க விடுதி உணவக ஊழியர்கள் கைவண்ணத்தில் 7 நாட்கள் ஆனது. 150 கிலோ எடையுள்ள 8000- ஜிஞ்சர் பிஸ்கட்கள் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 அடி உயர தொங்கும் கிறிஸ்துமஸ் மரமும் உருவாக்கப்பட்டுள்ளது.இது சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றார் அவர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu