36 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் பழனி பள்ளியில் சந்திப்பு

36 ஆண்டுகளுக்கு முன்  படித்த முன்னாள் மாணவர்கள் பழனி பள்ளியில் சந்திப்பு
X

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 36 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

பள்ளியில் படித்து 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்தனர்

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 36 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட வருடத்திற்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர்.

பழனி நகரில் 102 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து செயல்பட்டு வரக்கூடிய இந்தப் பள்ளியில் பெரும்பாலும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த கிராமப்புற மாணவர்கள் பயின்று வருகின்றனர். 1985 ஆண்டில் இந்தபள்ளியில் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு தங்களுக்கு கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் அழைத்து வந்து மரியாதை செய்தனர். இந்தப் பள்ளியில் படித்த மாணவர்களில் பலரும் அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளிலும், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், தொழில் அதிபர்களாகவும், வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்பவர்களாகவும் உள்ளனர்.

அவர்கள் அனைவரும் தாங்கள் சமுதாயத்தின் உயர்ந்த இடத்தை அடைய உறுதுணையாக இருந்த பள்ளியையும், தங்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் ஆசிரியர்களையும் மறவாமல், தங்களது குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் அழைத்து வந்து கூடி மகிழ்ந்தனர். பள்ளியில் படித்து 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்ட நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் பள்ளிப் பருவ நிகழ்வுகளை எடுத்துக் கூறி தோழர்களுடன் அன்பை பகிர்ந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் மாணவர்கள் சிலர், பள்ளிப் பருவ காலத்தில் தங்களை அடித்து நல்வழிப்படுத்திய ஆசிரியர் கையால் மீண்டும் அடி வாங்கி, தங்களது பள்ளிப்பருவ நிகழ்வுகள் நினைவுகூர்ந்தனர். மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அப்போது பள்ளிப்பருவ தோழர்களை மீண்டும் கண்ட உற்சாகத்தில் ஒருவருக்கு ஒருவர் உணவை பகிர்ந்து கொண்டும், ஊட்டி விட்டு குழந்தைகளாக மாறினர்.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு 102 ஆண்டுகள் கடந்து தற்போது செயல்பட்டு வரும் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்ற விண்ணப்பம் செய்து அரசின் பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு இதனை ஏற்று விரைவில் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை மாதிரி பள்ளியாக அறிவிக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story