தாம்பூல தட்டில் தக்காளி வைத்து அழைப்பிதழ் கொடுத்த அ.தி.மு.க.வினர்

தாம்பூல தட்டில் தக்காளி வைத்து அழைப்பிதழ் கொடுத்த அ.தி.மு.க.வினர்
X

அ.தி.மு.க. மாநாடு அழைப்பிதழ் தாம்பூல தட்டில் தக்காளி.

பழனியில் தாம்பூல தட்டில் தக்காளி வைத்து மதுரை மாநாட்டு அழைப்பிதழ்களை அ.தி.மு.க.வினர் கொடுத்தனர்.

மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டு அழைப்பிதழை பொதுமக்களுக்கு வழங்கினார்.

பொதுவாக அழைப்பிதழ் கொடுக்கும்போது தாம்பூலத்தட்டில் வெற்றிலை-பாக்கு மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, வாழை, திராட்சை உள்ளிட்ட பழங்களை வைத்திருப்பதை பார்த்திருப்போம். இது தான், நீண்ட நெடுங்காலமாக நம்முடைய மரபாக இருந்து வருகிறது.

இந்தநிலையில், ஆனால் நேற்று அ.தி.மு.க.வினர் அழைப்பிதழ் கொடுத்தபோது தாம்பூலத்தட்டில் வெற்றிலை பாக்குடன் தக்காளி பழங்களை வைத்திருந்தனர். இது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி என்பதால், அழைப்பிதழ் வாங்குவதற்கு பெண்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு அழைப்பிதழுடன், ஒரு கிலோ வீதம் தக்காளி வழங்கப்பட்டது. எட்டாக்கனியாக இருந்த தக்காளியுடன் கொடுத்த அழைப்பிதழை பொதுமக்கள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் வாங்கினர்.

தக்காளி விலை கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.200 வரை கொடி கட்டி பறந்தது. இந்நிலையில் தற்போது தக்காளி விலையில் சற்று சரிவு ஏற்பட்டு ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.70வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனாலும் தக்காளி பற்றிய பயம் மக்களுக்கு குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு இன்னும் நீங்கவில்லை. இந்த நிலையில் தான் அ.தி.மு.க.வினர் மதுரை அ.தி.மு.க. மாநாடு பற்றிய அழைப்பிதழை கொடுக்கும்போது அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தக்காளிகளை தாம்பூல தட்டில் வைத்துக் கொடுத்து அழைத்து இருக்கிறார்கள்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு