பழனி முருகன் கோவிலில் அறநிலையத்துறை முதன்மை செயலாளர் திடீர் ஆய்வு
பழனி முருகன் கோவிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர்.
தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி உலகப் புகழ் பெற்றது. இன்று தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா,கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அரசின் கட்டுப்பாட்டு விதிகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதோடு வழிபாட்டு முறைகளான தங்கரத புறப்பாடு, கட்டளை தரிசனம், தங்கத்தொட்டில் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் கோவில் கும்பாபிஷேகத்துக்கான பணிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று இந்து சமய அறநிலைத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் பழனிக்கு திடீர் வருகை தந்தார்.
அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மலைக் கோயிலுக்குச் சென்ற அவர், அங்கு நடைபெற்றுவரும் கும்பாபிஷேகப் பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து அன்னதானக் கூடத்திற்கு சென்று பக்தர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் நடராஜன் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu