வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைவால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு
X

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை முகப்பு படம் 

கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்ததால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது

தென்தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விளங்குகிறது. சுற்று வட்டார பகுதிகளான காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, கொசவபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கேதையரும்பு, இடைய கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு அதிகமான நிலத்தில் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது.

இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது. இது இல்லத்தரசி களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுதபூஜை, பொங்கல் மற்றும் பூஜை நாட்களில் பூசணிக்காய் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வெளி மாநில வியாபாரிகள் வராததால் பூசணிக்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது.

வழக்கமாக 1 கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விலை கேட்கப்படும். ஆனால் தற்போது ரூ.7க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுதவிர மற்ற காய்கறிகளின் வலை கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த மாதம் ரூ.25க்கு விற்பனையான சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.80க்கு விற்கப்பட்டது. ரூ.15க்கு விற்கப்பட்ட பல்லாரி ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. கரும்பு முருங்கை ரூ.70, மர முருங்கை ரூ.45, செடி முருங்கை ரூ.60, வெண்டை க்காய் ரூ.30, புடலங்காய் ரூ.30, பாகற்காய் ரூ.25, கல்லாமை மாங்காய் ரூ.65, உருட்டு மாங்காய் ரூ.45, உருளைக்கிழங்கு ரூ.40, சேனைக்கிழங்கு ரூ.55, பீன்ஸ் ரூ.45 என்ற விலையில் விற்பனையானது.

20 கிலோ பை பச்சை கத்தரிக்காய் ரூ.400, வெள்ளை கத்தரிக்காய் ரூ.500, கலர் கத்தரிக்காய் ரூ.550, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இனிவரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!