திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா தலமாக மாறபோகும் திருநல்காசி
திருநல்காசி கோவில்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாட்சி பகுதி முந்தைய காலத்தில் விருப்பாட்ச பட்டணம் என அழைக்கப்பட்டது. மன்னர் திருமலைநாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் அவரது கனவில் அசரிரீயாக தோன்றி உத்தரவின்படி தலையூத்து அருவிக்கு அருகில் தனது இஷ்ட தெய்வமான சிவபெருமானுக்கு விருப்பாட்ச ஈஸ்வரர் கோவிலையும், தனது குலதெய்வமான பெருமாளுக்கு நீலமலை அழகர் கோவிலையும் அமைத்தார்.
இந்த கோவில்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மூலிகை வாசம் நிரம்பிய வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. கோவிலுக்கு செல்ல எவ்வித தடையும் இல்லை. முற்றிலும் வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும் சில கி.மீ தூரம் கரடு முரடான பாதையில் நடந்து இங்குள்ள சிவபெருமானை வழிபட முடியும். சிவன் கோவிலுக்கு செல்லும் வழியில் நீலமலை அழகர் கோவில், சப்த கன்னிகள், ஆஞ்சநேயர், விநாயகர் சன்னதிகளும் உள்ளன. இங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றால் விருப்பாட்சி ஈஸ்வரர் கோவிலை அடையலாம். அங்கு 18ம் படி கருப்பணசாமி, வன துர்க்கை, பைரவர், நாகவிசாலாட்சி அம்மன் ஆகிய காவல் தெய்வங்களும் உள்ளன.
இக்கோவில் அருகில் தலையூத்து என்று அழைக்கப்படும் திருநல்காசி நதி அமைந்துள்ளது. பரப்பலாறு அணையில் இருந்து வெளியேறும் நீர் விருப்பாட்சி மலை வழியாக தலையூத்து அருவியாக கொட்டுகிறது. கடும் வறட்சி ஏற்பட்டாலும் தலையூத்து அருவியில் வற்றாத ஜீவநதி போல தண்ணீர் கொட்டி வருவது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். காசித் தீர்த்தத்துக்கு இணையாக இந்த தண்ணீரை கருதுவதால் திருநல்காசி என்ற பெயர் பெற்றது.
மலையடிவாரத்தில் இருந்து பல கி.மீ தூரம் சென்று நன்காஞ்சி என்ற ஆறாக ஓடுகிறது. இந்த நதி புனித தீர்த்தமாக கருதப்படுவதுடன் கோவில் கும்பாபிஷேகங்களுக்கு இந்த நீரை கலசங்களில் சேகரித்து செல்கின்றனர். திருநல்காசி ஆலயத்தில் 17ம் நூற்றாண்டு காலம் வரை 6 கால பூஜைகள் நடந்து வந்தன. அதன் பிறகு கோபால்நாயக்கர் காலத்தில் ஆங்கிலேயருடன் நடந்த போரால் கோவில்கள் சேதமடைந்தன. இருந்தபோதும் தொடர்ந்து வரும் பக்தர்கள் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சுவாமி தரிசனம் செய்து தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்தி கோவிலை புதுப்பித்தனர். ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி விழாவின் போது ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் இங்கு தங்கி வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் ஆடி அமாவாசை உள்ளிட்ட நாட்களில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து காசிநாதரை வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலுக்கு செல்ல பஸ் வசதி கிடையாது.
பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லில் இருந்து பழனி செல்லும் வழியில் விருப்பாட்சியில் உள்ள கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தோ, மோட்டார் சைக்கிளிலோ செல்ல வேண்டும். தற்போது பரப்பலாறு அணை மற்றும் விருப்பாட்சி, தலையூத்து அருவியை சுற்றுலா தலமாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் நிறைவடைந்தால் திருநல்காசிநாதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதோடு தலையூத்து அருவியும் சுற்றுலா தலமாக மாறும் என்பதில் ஐயமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu