நெற்குப்பை கட்டளை காவடி குழுவின் 422 வருட பாரம்பரிய வேல் மாயம்

நெற்குப்பை கட்டளை காவடி குழுவின்  422 வருட  பாரம்பரிய வேல் மாயம்
X

நெற்குப்பை கட்டளை காவடி குழுவினர்

நெற்குப்பை கட்டளை காவடி பாதயாத்திரை பக்தர்களின் 422 வருட பாரம்பரிய வேல் மாயமானதால் புதிய வேலுடன் பயணம் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை கட்டளை காவடியில் (செட்டியார்கள்) மேலச்சுவரி, வளையப்பட்டி, புதுப்பட்டி, நெற்குப்பை பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பல நூறு ஆண்டுகளாக வேலுடன் பழனிக்கு காவடியுடன் பாதயாத்திரையாக செல்வது வழக்கம் .

இந்தாண்டு கடந்த 13ஆம் தேதி கிளம்பி நத்தம் வழியாக பழனி பாதயாத்திரை சென்ற காவடி சமுத்திராபட்டியில் நேற்று முன்தினம் (14ஆம் தேதி) தங்கியிருந்த போது தாங்கள் கொண்டு வந்த 422 வருடத்திற்கு மேலான பாரம்பரியம் மிக்க தாமிரப் பட்டையால் செய்யப்பட்ட 3 அங்குலம் உயரம் கொண்ட இரண்டு வேல்கள், ஒரு வெள்ளி பீடம் உள்ளிட்டவை மாயமானது.

நெற்குப்பை கட்டளை காவடி குழுத்தலைவர் பூசாரி செட்டியார் தலைமையில் வேல் மாயமானது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து நத்தம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மலை மூலஸ்தானத்தில் வைத்து அபிஷேகம் செய்யும் நெற்குப்பை கட்டளை காவடி குழுவினர் கொண்டு வரும் வேல் காணவில்லை என்பதால் காவடி எடுத்து செல்லும் பக்தர்களும் பாதையாத்திரை பக்தர்களும் மிகுந்த மன வேதனையில் உள்ளனர்.

பல மணி நேரம் தேடலுக்குப் பின்பும் வேல் கிடைக்காததால் மாற்று ஏற்பாடாக புதிய வேல் பூஜை செய்யப்பட்டு தங்களது காவடி பாதயாத்திரையை நெற்குப்பை கட்டளை காவடி குழுவினர் பழனியை நோக்கி தொடர்ந்தனர்.

மேலும் பாரம்பரியமிக்க வேல் கிடைத்துவிட்டால் தங்கள் புதிதாக கொண்டு செல்லும் வேலை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தப்படும். பழைய வேல் பாரம்பரிய முறைப்படி மீண்டும் பூஜை செய்யப்படும் என அவர்கள் தெரிவித்தனர். வேல் கிடைக்க வேண்டும் என்று முருகனை மனம் உருகி வேண்டி வருகிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!