நத்தம் அருகே கல்குவாரி இயக்க மக்கள் எதிர்ப்பு..!
நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் சாலையில் கரடிக்குட்டுப்பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான புளூ மெட்டல்ஸ் என்னும் கிரசர் செயல்பட்டு வருகிறது. இது கரடிக்குட்டுப்பகுதியில் உள்ள பாறைகளை வெடிகள் கொண்டு உடைத்து அவற்றை ஒன்றரை, முக்கால், சிப்ஸ், மணல், தூசி போன்ற பொருட்களாக தயார் செய்கின்றனர். இங்கு இந்த குவாரி செயல்படுவதால் தூசி பறந்து அப்பகுதிகளில் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களின் மீது படிந்து விடுவதுடன் மகசூல் பாதிப்புக்குள்ளாகிறது.
மேலும் அப்பகுதியில் வாழும் மக்கள் மார்புச் சளி, இருமல் போன்ற நோய்களால் அவதி அடைவதாகவும் கூறியும், குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்ப்பதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள் அதிர்ந்து சுவர்கள் சேதம் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதிகளான செங்குளம், தேவர் பஸ் நிறுத்தம், புதுப்பட்டி கிராம பகுதிகளைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் அந்த கிரசர் குவாரியை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த நத்தம் தாசில்தார் விஜயலட்சுமி, இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது சம்மந்தப்பட்ட கனிம வளத்துறை அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை கிரசரை ஓட்டக் கூடாது என்று கிரசர் நிர்வாகத்திற்கும் கூறியதையடுத்து முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டம் மாலை 4 மணிமுதல் 5 மணிவரை சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu