நிலக்கோட்டையில் ஆதார் அட்டை திருத்தம் கேட்டு வருபவர்கள் அலைக்கழிப்பு
ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக திரண்டு நிற்கும் பெண்கள்.
இந்தியா முழுவதும் பொதுமக்களின் ஒரே அடையாளமாக ஆதார் அட்டை விளங்குகிறது. இந்த ஆதார் அட்டை தற்போது ஒரு மனிதனின் முக்கிய அங்கமாக பள்ளியில் படிப்பதற்கும், வங்கி கணக்கு தொடங்குவதற்கும், ரேஷன் கார்டில் இடம்பெயர்வதற்கு என அனைத்து பணிகளுக்கும் முக்கியமாக கருதப்படுகிறது.
தற்போது மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு ஆதார் அட்டை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான குடும்ப தலைவிகள் ஆதார் அட்டை, மின் கட்டண ரசீது, ரேசன் கார்டு ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு சமர்ப்பித்து வருகின்றனர். ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காகவும், இ-சேவை மையங்கள் மற்றும் தபால் அலுவலகங்களில் திரண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தலைமை தபால் அலுவலகத்தில் ஆதார் திருத்தங்கள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அறிந்த பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் முதியோர்கள் என அனைவரும் ஆதார் அட்டை புதிதாக எடுப்பதற்கும், திருத்தங்கள் செய்வதற்கும் காலை 7 மணி முதல் குவியத் தொடங்கி வருகின்றனர். இதனால் நிலக்கோட்டை தலைமை தபால் அலுவலகம் முன்பு கூட்டம் அலை மோதி வருகிறது. காலை 9 மணிக்கு டோக்கன் வழங்கும் பணியை தொடங்கி வெறும் 30 பேருக்கு மட்டுமே ஆதார் பணிகள் மேற்கொள்கின்றனர். மற்றவர்களை மறு நாள் வரச் சொல்லி அலைக்கழிக்கின்றனர். மறு நாள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் வேறு ஒரு நாளுக்கு வருமாறு கூறுகின்றனர்.
இதுகுறித்து ஒட்டுப்பட்டியைச் சேர்ந்த சுவனேசன் என்ற பள்ளி மாணவன் கூறியதாவது:-
நான் கடந்த 2 நாட்களாக பள்ளிக்கு விடுப்பு எடுத்து ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்காக அலைந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் மீண்டும் மீண்டும் என்னை அலைக்கழிக்கின்றனர். எனவே ஆதார் சேவை மையங்களை அதிகரிக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் நடத்தி ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஆதார் திருத்தத்துக்காக வந்து செல்வதால் பாடங்களை தொடர்ந்து கவனிக்க முடியவில்லை. இதற்கு தீர்வு காண பள்ளியிலேயே இ-சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu