தமிழகத்தில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐக் கடந்தது

தமிழகத்தில் முதன்முறையாக பெட்ரோல் விலை ரூ.100-ஐக் கடந்தது
X
முதல்முறையாகக் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்ததால் வாக‌ன‌ ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்திலேயே முதல்முறையாகக் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்ததால், வாக‌ன‌ ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா பரவல் 2-ம் அலை நிலவுகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல் விற்பனையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் கரோனா ஊரடங்கால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ளதால் அவற்றின் விலையை, உற்பத்தி செய்யும் நாடுகள் உயர்த்தி வருகின்றன.

இந்தியாவில் இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்போது பெட்ரோல், டீசல் விலையை விலையை உயர்த்தி வருகின்றன.

மே மாதம் இரண்டாவது வாரத்தில் பெட்ரோல்- டீசல் விலை உச்சம் தொட்டது. பின்னர் சற்று குறைந்தது. இந்தநிலையில் பெட்ரோல்- டீசல் விலை மீண்டும் உச்சம் தொட்டு வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இன்று அதிகபட்சமாக 1 லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாய் 4 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் டீச‌ல் 93 ரூபாய் 92 பைசாவிற்கும், ஸ்பீடு பெட்ரோல் 102 ரூபாய் 83 பைசாவிற்கும் விற்ப‌னை செய்ய‌ப்ப‌டுகிற‌து.

தமிழகத்தில் முதன்முறையாக ரூ.100-ஐக் கடந்து பெட்ரோல் விற்பனையாவது கொடைக்கானலில் மட்டும்தான். பெட்ரோல், டீசல் விலை உய‌ர்வால் வாக‌ன‌ ஓட்டிகள் க‌வ‌லை அடைந்துள்ள‌ன‌ர்.

கொரோனா ஊரடங்கால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும் எனப் பொதுமக்கள் கவலையுடன் கூறுகின்றனர். இதனால் எரிபொருள் விலையை குறைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story