நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்

நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம்
X
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வரும் மே 7ஆம் தேதி முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் வரும் மே 7ஆம் தேதி முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிக்கு வருகை தரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்கள் மே 7ம் முதல் மே. 30ம் தேதி வரை இ-பாஸ் பதிவு செய்து வர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், கொடைக்கானலுக்குக் கோடைக் காலத்தில் அதிகமாகச் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவதை முன்னிட்டு, இ-பாஸ் (EPass) முறையை அமல்படுத்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் TNEGA-வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகள், வணிகம், வியாபார வேலையாக வருபவர்களும் இ-பாஸ் பதிவு செய்து கொடைக்கானலில் பயணம் மேற்கொள்ளலாம். இ-பாஸ் தேவைப்படுபவர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்தால், ஆட்டோ ஜெனரேட் மூலம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இந்த இ-பாஸ் கால அவகாசம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து கியூ ஆர் கோட் மூலம் தெரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நமது நாட்டைச் சார்ந்த சுற்றுலாப் பயணிகள் அவர்களது கைப்பேசி எண் வாயிலாகவும், வெளி நாடுகளிலிருந்து கொடைக்கானலுக்கு வருகை தருபவர்கள் அவர்களது இ-மெயில் முகவரி வாயிலாகவும் அடிப்படை விவரங்களைச் சமர்ப்பித்து, இ-பாஸ் பதிவு செய்து கொண்டு, பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த மென்பொருளில் சுற்றுலாப் பயணிகளின் பெயர், முகவரி, எந்த வாகனத்தில் வருகை புரிகிறார்கள், வாகனத்தில் எத்தனை நபர்கள் வருகிறார்கள், தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களைப் பதிவு செய்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட ஒவ்வொரு வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து வருகை தர வேண்டும். கொடைக்கானலில் கோடைக் காலத்தையொட்டி, சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருக்கும் என்பதால் பரிசார்த்த முறையில் இந்த இ-பாஸ் நடைமுறை மே 7ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை அமல்படுத்தப்படுகிறது.

மேலும், கொடைக்கானலுக்கு வருகை தரும் அரசுப் பேருந்துகள் விபரங்கள் மற்றும் அதில் பயணிப்பவர்களின் விவரங்கள் நேரடியாக போக்குவரத்துத்துறை மேலாண்மை இயக்குநரிடமிருந்து பெற்றுக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

இந்த இ-பாஸ் 3 வகையான அடையாள கோடுகளுடன் வழங்கப்படவுள்ளது. உள்ளூர் பகுதி பொதுமக்களுக்குப் பச்சைநிற அடையாளக் கோட்டுடனும், வேளாண் விளை பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள், அடிப்படைத் தேவை மற்றும் சரக்கு வாகனங்களுக்கு நீலம் நிற அடையாளக் கோட்டுடனும், சுற்றுலா மற்றும் வர்த்தக ரீதியான வாகனங்களுக்கு ஊதாநிற அடையாளக் கோட்டுடனும் இ பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடைக்கானல் நகராட்சியின்(வெள்ளி நீர்வீழ்ச்சி) சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்துவதில் விலக்களிக்கப்பட்ட உள்ளூர் வாகனங்களுக்கு மே 7ம் தேதி முதல் மே 30ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு ஒருமுறை மட்டும் விண்ணப்பித்து உள்ளூர் இ-பாஸ் பெற்றுக்கொண்டால் போதுமானது.

மேற்காணும் சுங்கச்சாவடியின் சுங்கக் கட்டண விலக்கிலிருந்து விடுபட்ட உள்ளூர் வாகனங்களுக்கு, வாகனத்தின் அசல் பதிவுச்சான்று, காப்பீடுச் சான்று, நடப்பிலுள்ள புகைச் சான்று ஆகியவற்றுடன் வத்தலக்குண்டு பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகம் அல்லது சுங்கச்சாவடி (வெள்ளி நீர் வீழ்ச்சி) அருகில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புச் சேவை மையத்தில் பதிவு செய்து உள்ளூர் இபாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகில் உள்ள சுங்கச் சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல மே 7ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை அனுமதிக்கப்படுவர்.

சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் மொபைல் செயலி மூலம் இந்த கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து அந்த சுற்றுலாப் பயணிகளின் பயண விவரங்களைத் தெரிந்துகொள்வதோடு, இந்த நடைமுறையினை கண்காணிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ-பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மே 07ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் "epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் மே 06ஆம் தேதி காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரவு உணவுக்குப் பின் உடல் எடை குறைக்க இந்த 5 செயல்களை தினமும் செய்யுங்கள்!