தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
சிறப்பு அலங்காரத்தில் சொர்ண பைரவர்.
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சாமிக்கு சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பால், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என சரண கோஷமிட்டனர்.
இதனைத்தொடர்ந்து அரளி பூக்களால் பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தாடிக்கொம்புவை அடுத்த அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுக்காம்பட்டி துரைஆதித்தன் சித்தர் சுவாமிகள் தலைமையில் நடந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், மஞ்சள், பன்னீர், சந்தனம், தயிர், நெய் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை திரளான பக்தர்கள் வழிபட்டனர். சாவடி பஜாரில் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu