திண்டுக்கல் அருகே சாலை மறியல்: போலீஸார் பொதுமக்களிடையே தள்ளுமுள்ளு- 100 பேர் கைது

திண்டுக்கல் அருகே சாலை மறியல்: போலீஸார் பொதுமக்களிடையே  தள்ளுமுள்ளு- 100 பேர் கைது

திண்டுக்கல்- திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டம் அருகே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூர் பள்ளி மாணவி மர்மமான இறந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திண்டுக்கல்- திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குழந்தையின் பெற்றோர் உட்பட 100க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர் .

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது 9 வயது மகள் பிரித்திகா. அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள சமையல் கூடம் அருகே உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இன்று கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் , உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள கல்லறை தோட்டம் அருகே குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வேளாளர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் ஹரிஹரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்ட காரணத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வேறு வழியின்றி போலீசார் வலுக்கட்டாயமாக பெண்கள் உள்ளிட்டோரை அப்புறப்படுத்தி அனைவரையும் கைது செய்தனர்.

இதில் தீயில் கருகி உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகளும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். குழந்தையின் இறப்பில் மர்மம் இருப்பதாக நீதி கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த சம்பவத்தால் திண்டுக்கல் திருச்சி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story