காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்; பஞ்., தலைவர் மிரட்டல்

காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்; பஞ்., தலைவர் மிரட்டல்
X

குடிநீர் வழங்காததை கண்டித்து பள்ளபட்டி ஊராட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.

திண்டுக்கல் அருகே ஊராட்சி அலுவலகம் முன் காலி குடங்களுடன் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சி திண்டுக்கல் நகருக்கு அருகே உள்ள ஊராட்சியாகும். மொத்தம் 15 வார்டுகள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதமாக இப்பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அதேபோல் குடிநீர் கொடுக்கப்படவில்லை, சாலை வசதி இல்லை, கழிவுநீர் செல்லவில்லை எனக் கூறி இன்று பொதுமக்கள் 50 க்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களிடம் திமுகவை சேர்ந்த ஊராட்சி தலைவர் பரமன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அங்கு வந்த தண்ணீர் திறந்து விடும் ஆப்ரேட்டரையும் ஊராட்சி தலைவர் பரமன் மிரட்டினார். இதனால் இப்பகுதி பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் காவல் துறை வந்து சமாதானப்படுத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், எங்களது பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக குடிநீர் வரவில்லை. குடிநீருக்காக பல முறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் திமுக தலைவர் மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஊராட்சி அலுவலகம் எங்களது பகுதியில் தான் உள்ளது. ஆனால் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. எங்களது அன்றாட தேவைக்கு குடிநீரை விலை கொடுத்து தான் வாங்கி வருகிறோம். ஒரு குடம் 15 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கி வருகிறோம். மேலும் எங்களது பகுதியில் உள்ள கழிவு நீர் அனைத்தும் தேங்கி நிற்கிறது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்களும் கிடையாது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு முக்கிய காரணமே ஊராட்சி நிர்வாகமும் திமுக தலைவரும் தான். கழிவுநீர் வாய்க்காலை சுத்தம் செய்வது கிடையாது. கழிவுநீர் பாதைகளை சரி செய்வது கிடையாது. சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது என அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!