தலைகவசம் அணியாத வாகன ஓட்டிகள்; நூதன தண்டனை வழங்கிய காவல்துறை கண்காணிப்பாளர்

திண்டுக்கல்லில் தலைகவசம் அணியாத வாகன ஓட்டிகளை திருக்குறள் எழுத வைத்து நூதன தண்டனை வழங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
விபத்தில்லாத தமிழகம் அமைந்திட பல்வேறு விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தி வருகிறது. அதனடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
திண்டுக்கல் நகர் முழுவதும் தலைக் கவசம் அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகிய பகுதிகளுக்கு வரும் அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தலைகவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும் என அறிவிப்பு பலகைகள் கடந்த வாரம் வைக்கப்பட்டன.
கடந்த ஒரு வார காலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தலைக்கவசம் அணியாமல் வரும் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டன. இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தலைக்கவசம் அணியாமல் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் வருகை புரிந்தனர்.
இவர்கள் அனைவரையும் திண்டுக்கல் மாவட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் நிறுத்தி வைத்தனர். பின்னர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு வந்து தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய நபர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுக்க வைத்தார்.
மேலும் அனைவரும் தலா 10 திருக்குறளை எழுதி கொடுக்க சொல்லி நூதன தண்டனை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு தலைகவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என எச்சரிக்கை செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu