திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் மகிழ்ச்சியில் விவசாயிகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால்  மகிழ்ச்சியில் விவசாயிகள்
X
திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் மாதம் பெய்யும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாகிக் கொண்டே சென்றது. கடந்த வாரம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், மழை பெய்யாமல் ஏமாற்றி சென்றது.

10-ந் தேதி முதல் படிப்படியாக மழை குறையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென வானம் கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது. மாலை 3.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித்தீர்த்தது. இதனால் சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு சற்று ஓய்ந்த மழை பின்னர் மாலையில் சாரலுடன் தொடங்கி இரவு வரை பெய்தது.

இதனால் கடந்த சில நாட்களாக நகரில் வாட்டி எடுத்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து மக்கள் நிம்மதியடைந்தனர். மழையால் மாலையில் பள்ளி மாணவ-மாணவிகள் நனைந்தபடியே வீட்டுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 91.2 மி.மீ மழை அளவு பதிவானது. திண்டுக்கல் 26.2, கொடைக்கானல் 19.5, பழனி 3, நத்தம் 14, நிலக்கோட்டை 2, வேட சந்தூர் 3.2, காமாட்சிபுரம் 1.4, பிரையண்ட் பூங்கா 18.7 மி.மீ மழை அளவு பதிவானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக பெய்த இந்த மழையால் மண் குளிர்ந்து இருப்பதால் வானம் பார்த்த பூமியாக உள்ள பகுதிகளில் மானாவாரி சாகுபடி செய்வதற்கும் விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். அந்த வகையில் விவசாயிகளுக்கும் இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்