லஞ்ச வழக்கில் கைதான அமலாக்க துறை அதிகாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

லஞ்ச வழக்கில் கைதான அமலாக்க துறை அதிகாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
X
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்க துறை அதிகாரி அங்கிட் திவாரி மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.

இந்தநிலையில் மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அங்கிட் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவை தொடர்பு கொண்டு வழக்கு குறித்து பேசினார்.அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் டாக்டர் சுரேஷ்பாபு மீதுநடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.3 கோடி தரவேண்டும் என கூறியுள்ளார். பின்னர் பேரம் பேசி இறுதியாக ரூ.51 லட்சம் தரவேண்டும் என கூறியுள்ளார்.

அவரிடம் ஏற்கனவே ரூ.20 லட்சத்தை அங்கிட் திவாரி பெற்றுள்ளார். 2-வது தவணையாக திண்டுக்கல்லில் பணம் பெற முயன்றபோது லஞ்சஒழிப்பு போலீசார் அவரை காரில் துரத்திச்சென்று கைது செய்தனர். அவரிடம் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி மோகனா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதிஉத்தரவிட்டார். இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி வேறு யாரிடமும் இதேபோல் மிரட்டி பணம் பெற்றாரா எனபோலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையில் லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களைலஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்துச்சென்றனர். மேலும் அங்கிட் திவாரிக்கு நெருக்கமான அதிகாரிகளிடம், அவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அங்கிட் திவாரியிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்சஒழிப்புத்துறை போலீசார் நாளை திண்டுக்கல்மாவட்ட கோர்ட்டில் மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிஅங்கிட் திவாரியை மதுரை மத்திய சிறைக்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர். அதன்படி திண்டுக்கல் சிறையில் இருந்த அவர் இன்று மதுரைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!