பிரேத பரிசோதனைக்கு 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பிரேத பரிசோதனைக்கு 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
X
திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக 5 ஆயிரம் பணம் கேட்டதை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

திண்டுக்கல் மாவட்டம் என்.பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் அவரது மனைவி அர்ச்சனா அதே பகுதியில் உள்ள சந்திரவதனி ஆற்று பகுதியில் உள்ள தேங்கியிருந்த தண்ணீரில் துணி துவைக்க சென்றனர். அவர்களுடன் சக்திவேலின் உறவினர்களின் குழந்தைகளான சத்திய பாரதி, ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சென்றனர். சக்திவேலும், அர்ச்சனாவும் துணி துவைத்துக் கொண்டிருந்த போது சத்திய பாரதியும், ஐஸ்வர்யாவும் தண்ணீருக்குள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். திடீரென இருவரும் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களை காப்பாற்ற சக்திவேலும் அர்ச்சனாவும் முயன்றபோது சேற்றில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வைத்தனர்.

இன்று பிரேத பரிசோதனை நடைபெற இருந்த நிலையில் இறந்தவர்களின் ஒரு உடலுக்கு 5 ஆயிரம் வீதம் நான்கு உடலுக்கும் சேர்ந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இறந்தவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு தலைமை மருத்துவமனை பிரதான வாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு செவி சாய்க்காத பொதுமக்கள் அரசு மருத்துவமனையில் உடல்கூறு ஆய்விற்காக பணம் கேட்பது கண்டிக்கத்தக்கது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கு பிறகு பொதுமக்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக வைத்தனர். இதனால் அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது..

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!