பழனியில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
தமிழகத்தின் சிறந்த ஆன்மீக தலமாகவும் முருகபெருமானின் 3ம் படை வீடாகவும் பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருவிழா காலங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்தம், பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
அந்த வகையில் வார விடுமுறையான இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மேலும் நாளை (26ம் தேதி) பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதையொட்டி பால்குடம், காவடி எடுத்தும், படிப்பாதையில் படிபூஜை செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். படிபூஜை செய்யும் பக்தர்கள் சிலர் பக்தர்கள் செல்லும் பாதையில் சூடம் ஏற்றி வழிபட்டனர். இது நடந்து செல்லும் பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது.
இதுமட்டுமின்றி மலைக்கோவிலின் தரிசன வழிகள், வெளிப்பிரகாரம், படிப்பாதை ஆகிய இடங்களில் கூட்டம் காணப்பட்டது. அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்ல மின் இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த பின்பே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலுக்கு முருகனை தரிசிக்க அதிகாலையில் இருந்தே பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வந்ததால் அடிவாரம் ரோடு, பூங்காேராடு, கிரி வீதி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாமி தரிசனம் செய்தபின்பு ஊருக்கு திரும்புவதற்காக பக்தர்கள் பழனி பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இதனால் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பக்தர்களுக்கு கட்டணம் இல்லாமல் மொட்டை அடிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. சரவணப்பொய்கை மற்றும் மலையடிவாரத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முடி காணிக்கை நிலையத்தில் மொட்டை அடிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மொட்டை அடிக்கக்கூடிய பக்தர்களுக்கு இணைய வழியில் டிக்கெட் வழங்கப்படுகிறது. அடிக்கடி இணைய சேவை பாதிக்கப்படுவதால் பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
இன்று காலை சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இணைய சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் மொட்டை அடிக்க டிக்கெட் வழங்கப்படாமல் இருந்தது. இதன் காரணமாக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இணைய வழியில் டிக்கெட் வழங்கும் வசதியையும் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடிக்கடி ஏற்படக்கூடிய இணைய சேவை பாதிப்பின் காரணமாக இது போன்ற கூட்ட நெரிசல்கள் ஏற்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் இணைய சேவை சரி செய்யப்பட்டதை அடுத்து பக்தர்கள் மொட்டை அடித்துச் சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu