திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க 21,149 பேர் விண்ணப்பம்
திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியானது. இதையடுத்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்குள் இடமாறுதல் தொடர்பாக கடந்த 30-ந்தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதையொட்டி மாநகராட்சி, நகராட்சி, தாலுகா அலுவலகங்களுக்கு மக்கள் நேரில் சென்று விண்ணப்பித்தனர். மேலும் 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் வகையில், சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. அதன்படி மாவட்டம் முழுவதும் 1,215 வாக்குச்சாவடிகளிலும் 6 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
இதில் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு 21 ஆயிரத்து 129 பேர் விண்ணப்பம் செய்து இருந்தனர். அதேபோல் பெயரை நீக்கம் செய்வதற்கு 5 ஆயிரத்து 42 பேரும், திருத்தம் செய்வதற்கு 3 ஆயிரத்து 494 பேரும், தொகுதிகள் இடமாற்றம் செய்வதற்கு 2 ஆயிரத்து 313 பேரும் விண்ணப்பம் செய்து உள்ளனர்.இதன்மூலம் மொத்தம் 31 ஆயிரத்து 978 பேர் விண்ணப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி நிறைவுபெற்றதும் கள விசாரணை நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த மாதம் (ஜனவரி) வெளியிடப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu