பொங்கலுக்கு வாங்கிய மஞ்சளில் ஊறுகாய் போடலாம் தெரியுமா? அரிய டிப்ஸ் இதோ...
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் முதன்மையானது பொங்கல் திருநாள். தை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை அறுவடை திருநாளும் ஆகும். தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு, இனிப்பு வகைகள் எப்படி முதலிடம் பெறுகிறதோ அதைப்போன்று பொங்கல் பண்டிகையின்போது சர்க்கரை பொங்கல், கரும்பு, மஞ்சள் கொத்து முக்கிய இடத்தை பிடிக்கிறது.
மஞ்சள் குலை
கரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகை நிறைவு பெறாது என்பது போல் மஞ்சள் கொத்து இல்லாமலும் பொங்கல் பண்டிகை மகிமை பெறாது என்பது மக்களின் கருத்து. மங்களத்தின் அடையாளமான மஞ்சள் குலையை பொங்கல் பானையின் முகப்பு பகுதியில் கட்டி பகவலுக்கு படைத்தால் தான் நாம் போடும் படையல் நிறைவு பெற்றதாக அர்த்தம்.
மஞ்சளின் மகிமை
பொங்கலுக்கு வாங்கும் கரும்பை நாம் கடித்து சாப்பிட்டு விடுவோம். ஏனென்றால் அது ஒரு உணவு பொருள். ஆனால் மஞ்சள் அப்படி அல்ல. மஞ்சளின் மகிமை தெரியாமல் பலரும் அதனை தூக்கி குப்பையுடன் சேர்த்து தூர எறிந்து விடுகிறார்கள். சிலர்தான் அதனை காய வைத்து மங்கள பொருளாக பயன்படுத்துகிறார்கள்.
மஞ்சள் ஊறுகாய்
சரி இன்று பொங்கல் பண்டிகை கிட்டத்தட்ட முடிந்தாகிவிட்டது என்றே சொல்லவேண்டும். நாம் வீடுகளில் தயாரித்த சர்க்கரை பொங்கல் இறைவனுக்கு படைத்த பின்னர் நமக்கு உணவாக போய் இருக்கும். கரும்பும் நமது வயிற்றிற்குள் போனதால் காணாமல் போய் இருக்கும். ஆனால் மஞ்சள்? மஞ்சளில் ஊறுகாய் தயாரிக்க முடியும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது.
பொங்கலுக்கு பயன்படுத்திய மஞ்சள் குலையில் இருந்து ஊறுகாய் எப்படி தயாரிப்பது என்பதை இனி பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
மஞ்சள் ஊறுகாய் தயாரிப்பதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன தெரியுமா?மஞ்சள் 100 கிராம், இஞ்சி 50 கிராம், பச்சை மிளகாய் 6, பூண்டு 6 பல், எலுமிச்சம் பழச்சாறு அரை கப், கடுகு 3 டீஸ்பூன், வெந்தயம் அரை டீஸ்பூன், சோம்பு 1 டீ ஸ்பூன், பெருங்காய பொடி அரை டீஸ்பூன், உப்பு ஏற்றார்போல்,நல்லெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.
தேவையான பொருட்கள் லிஸ்ட் பார்த்து விட்டோம்.இனி செய்முறை எப்படி என பார்ப்போமா?
செய்முறை
மஞ்சள், இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் மேல் தோலை நீக்கி சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும். பின்னர் அவற்றை நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவேண்டும். பச்சை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய பின்னர் எல்லாவற்றையும் ஒரு டிஸ்யூ பேப்பரில் பரப்பி வைத்து அதிகப்படியான உள்ள ஈரத்தை நீக்கவேண்டும். ஒரு கண்ணாடி பவுலில் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் துண்டுகளை சேர்க்கவேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொண்டு அவற்றை கலக்கவேண்டும்.
பயன்படுத்துவது எப்படி?
மிக்சி ஜாரில் கடுகு, வெந்தயம், சோம்பு, பெருங்காய பொடியை போட்டு அரைகுறையாக அரைக்கவேண்டும். பின்னர் அடுப்பில் வானலியை வைத்து நல்லணெ்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். அதன் பின்னர் அரைத்து வைத்திருக்கும் பொடியை அதில் கொட்டி நன்றாக கிளறவேண்டும். பிறகு அடுப்பை அணைக்கவேண்டும். இதனை பின்னர் மஞ்சள் கலவையில் கொட்டி கிளறவேண்டும். ஊறுகாய் கலவையை கண்ணாடி அல்லது பீங்கான் ஜாடியில் நிரப்பி மூடவேண்டும். நில மணி நேரத்திற்கு பின்னர் திறந்து கிளறி விட்டு மீண்டும் மூடி வைக்க வேண்டும். இந்த ஊறுகாயை அறை வெப்ப நிலையில் 2 நாட்களுக்கு அப்படியே வைக்கவேண்டும்.பின்னர் குளிர்சாதன பெட்டியில் வைத்து நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம்.
ஊறுகாய் மட்டும் அல்ல இந்த மஞ்சளை சரும வியாதிகளை போக்கும் மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தலாம். அது எப்படி என்பதை பார்ப்போமா?
கிருமி நாசினி
மஞ்சளின் மேல் தோலை நீக்கி விட்டு, பசை போல் அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் காணாமல் போய்விடும். இந்த மஞ்சள் விழுதை கொதிக்கும் நீரில் போட்டு நீராவி பிடித்தால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கிருமிகள் நீங்கி உடல் சுந்தமாகும்.
மஞ்சளின் மேல் தோலை நீக்கி உரலில் போட்டு இடித்து குழம்பு மற்றும் ரசம் தயாரிக்கும்போது அதில் இதனை சேர்த்துக்கொள்ளலாம். மஞ்சள் சேர்த்த ரசத்தை பருகினால் சளி மற்றும் இருமல் குறையும்.
லட்சுமி கடாட்சம்
வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்குடன் மஞ்சளை சேர்த்து கொடுப்பதன் மூலம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் சேரும் என்பதும் ஐதீகமாக கருதப்படும்.
கபம் நீக்கும் மாமருந்து
மஞ்சளை நெருப்பில் சுட்டு பொடி செய்து ஆறாத புண்களின் மேல் பூசி வந்தால் விரைவில் புண்கள் ஆறிவிடும். உப்பு இருக்கும் ஜாடியில் மஞ்சளை சிறு துண்டுகளை நறுக்கி போட்டு வைக்கலாம். வயிற்று வலி ஏற்படும் நேரத்தில் ஒரு துண்டு மஞ்சளை சாப்பிட்டால் வலி குறையும். மஞ்சள் , இஞ்சி இரண்டையும் நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் கபம் எனப்படும் சளி கரைந்து வறட்டு இருமல் குணமாகும்.
பெண் குழந்தைகளுக்கு நலுங்கு மாவு அரைக்கும்போது இந்த மஞ்சளை காய வைத்து சேர்த்து அரைக்கலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu