சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி: அரசு உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி: அரசு உத்தரவு
X

சிதம்பரம் நடராஜர் கோவில் 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேல் ஏறி சாமி தரிசனம் செய்ய முதலில் முக்கிய விஐபிக்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. பின்னர் பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருட்களை பெறுதல், சாமிகளை தொட்டு தரிசனம் செய்தல், அமர்ந்து வழிபடுவது அங்கப்பிரதட்சனம் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து அனைத்து கோயில்களிலும் பழைய முறையே பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் அதன்பிறகு சிதம்பரம் நடராஜர் கோயிலில் மட்டும் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய , தீட்சிதர்கள் ஒன்றுசேர்ந்து முடிவெடுத்து தடைவிதித்தனர்.

இதனால் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் இதுதொடர்பாக நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில் இன்று கனகசபை மீது பொதுமக்கள் ஏறி வழிபட அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 20-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் `பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, கொரோனாவின் தற்போதைய நிலை குறித்து கோயில் நிர்வாகத்தினர் ஆலோசித்து முடிவு செய்ய உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடலூர் ஆட்சியரால் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியரின் அறிக்கை அடிப்படையில் கனகசபை மண்டபத்தின் மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்திட அனுமதி வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!